நியூஸிலாந்து வரலாற்றில் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட மிக மோசமான கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைச் சம்பவத்தினையடுத்து உயிரிழந்தோரின் உடல்கள் ஐந்து நாட்களின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
திடீர் மரண விசாரணை அதிகாரி அலுவலகத்திலின் செயற்பாடுகள் முடிவடைந்து ஜனாஸாக்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து குறைந்தது ஐந்து ஜனாஸாக்கள் நேற்று ஞாபகார்த்த பூங்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
கொல்லப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் நியூஸிலாந்திற்கு வந்து சேர்ந்திருந்த 15 வயது சிரிய நாட்டு அகதியான ஹம்ஸா முஸ்தபா, அவரது தந்தை 44 வயதான காலித் ஆகியோரின் ஜனாஸாக்கள் கடந்த புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுள் உள்ளடங்குகின்றன.
மரணமடைந்த ஹம்ஸாவின் இளைய சகோதரனான 13 வயதான ஸெயிட்டுக்கு துப்பாக்கிச் சூட்டின் காரணமாக காலில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். ஜனாஸா நல்லடக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு கலந்துகொண்டிருந்தார்.
36 வயதான ஜுனைட் இஸ்மாயில் மற்றும் 58 வயதான அஷ்ரப் அலி ஆகியோரின் ஜனாஸாக்கள் புதன்கிழமை பிற்பகல் வேளையில் பிறிதொரு நிகழ்வில் நல்லடக்கம் செய்யப்பட்டன. நல்லடக்கம் செய்யப்பட்ட ஐந்தாவது ஜனாஸாவின் பெயர் வெளியிடப்படவில்லை.
நல்லடக்கம் செய்யப்பட்ட குழியினை மூடுவதற்கு சவள் போன்ற உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. மண்ணைக் குழியினுள் போடும் செயற்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கமைவாக அனைவரும் தமது கரங்களினாலேயே மண்ணைப்போட்டு குழிகளை மூடினர்.
அந் நூர் மற்றும் லின்வூட் பள்ளிவாசல்களில் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் ஐந்து பேரின் பெயர்கள் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதையடுத்து நல்லடக்கம் இடம்பெற்றது.
திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசின்டா ஆர்டேனினால் வருணிக்கப்பட்டுள்ள இப் படுகொலைச் சம்பவத்தில் மூன்று வயதான முகாட் இப்றாஹிம் என்ற சிறுவனும் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-Vidivelli