இலங்கை முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்தி வருகின்றோம் என இலங்கை சமூகத்திற்கான ஐரோப்பிய நிலையத்தின் பொதுச்செயலாளர் முயீஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என்றே கூறவேண்டும். அவர்கள் தமக்கு தேவையான வாக்குவங்கியை பலப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த விடயத்தில் செயற்படுகின்றனர். இதுவும் ஒரு கவலைக்குரிய விடயமாகும். அவர்களுடைய பங்களிப்பு அதிகமாக இருக்கவேண்டும். அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற வலிமைகளை அவர்கள் பெறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்துள்ள முயீஸ் வஹாப்தீன் வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு:
நேர்காணல் – ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்
Q – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பாளவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: 15 பக்கங்களைக் கொண்ட ஆணையாளரின் இந்த அறிக்கையில் பல பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அங்கத்துவ நாடுகள், ஐ.நா. மனித உரிமை பேரவை மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய தரப்புக்கள் செய்யவேண்டிய பணிகள் தொடர்பாக பரிந்துரைகள் காணப்படுகின்றன. கடந்த வருடம் மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டி மாவட்டத்தில் கலவரம் இடம்பெற்றது. அது தொடர்பாக இந்த அறிக்கையின் 58,59,60 ஆவது பந்திகளில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு முக்கியமான அம்சமாகும். அறிக்கையில் உள்ளடக்கப்பட்டதுடன் ஐ.நாவின் இந்த நடவடிக்கைகள் நின்றுவிடக்கூடாது. அது தொடர்பில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், முஸ்லிம் நாடுகள் போன்றவற்றுடன் கலந்துரையாடி வருகின்றோம்.
Q – நீங்கள் தொடர்ச்சியாக இலங்கை முஸ்லிம்களின் நெருக்கடிகள் தொடர்பில் இவ்வாறான தெளிவுபடுத்தும் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றீர்களா?
பதில்: கடந்த சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் நடவடிக்கைகள், இனவாத செயற்பாடுகள் தொடர்பாக நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு கொண்டு வருகிறோம். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடக்கம் இறுதியாக நடைபெற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாம் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். கண்டி கலவரத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களால் கொண்டுவரப்பட்ட அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. அது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
Q – முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் செயற்படும்விதம் போதுமானதாக இருக்கின்றதா?
பதில்: போதுமானதாக இல்லை என்றே கூறவேண்டும். அவர்கள் தமக்குத் தேவையான வாக்குவங்கியை பலப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த விடயத்தில் செயற்படுகின்றனர். இதுவும் ஒரு கவலைக்குரிய விடயமாகும். அவர்களுடைய பங்களிப்பு அதிகமாக இருக்கவேண்டும். அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற வலிமைகளை அவர்கள் பெறவேண்டும். உதாரணமாக கடந்த அரசியல் நெருக்கடி காலத்தின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னுதாரணமாக செயற்பட்டது. அரசாங்கத்துடன் அவர்கள் பேரம் பேசி சரியான முறையில் செயற்பட்டார்கள். அந்த அடிப்படையில் முஸ்லிம் அமைப்புக்களும் கட்சிகளும் உறுதியான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து துணிகரமாக சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
Q – இலங்கையிலிருந்து தமிழ் மக்களின் சார்பில் அதிகமான பிரதிநிதிகள் ஜெனிவாவிற்கு வந்து செல்கின்றனர். அவர்களுடன் இணைந்து நீங்கள் செயற்பட்டு வருகின்றீர்களா?
பதில்: கடந்த கூட்டத் தொடரிலிருந்து நான் தமிழ் தலைமைகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ் தரப்பு தலைமைகளுடன் நான் எங்களது விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றேன். இதனை எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்க எதிர்பார்க்கின்றேன். இன்னும் பல அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றேன். புலம்பெயர் அமைப்புக்களுடனும் இணைந்து செயற்பட விரும்புகின்றோம். அதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்கின்றோம்.
Q – இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவானது யுத்த காலத்தில் சீர்குலைந்தது. தற்போது மீண்டும் அது கட்டியெழுப்பப்படுகின்றது. ஆனாலும் கிழக்குபோன்ற இடங்களில் சில அசம்பாவிதங்கள் முரண்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது உறவானது மிகவும் பலமாக இருக்கவேண்டும். அப்படித்தான் அது கடந்த காலங்களில் இருந்தது. திட்டமிட்ட அடிப்படையிலோ அல்லது யுத்தப் பிரச்சினைகளினாலோ இந்த உறவில் சிறு விரிசல் ஏற்பட்டது. அது தொடர்ந்தும் விரிவடைந்து சென்றுவிட்டது. அந்த உறவு சிறப்பாக பலமடையவேண்டும். யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் நாம் நல்லிணக்கம் குறித்து பேசுகின்றோம். எனவே தமிழ் – முஸ்லிம், சிங்கள உறவைக் கட்டியெழுப்புவதன் மூலமே ஒரு சிறந்த நாட்டை உருவாக்க முடியும். தமிழ் – முஸ்லிம் உறவானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரே மொழியைப் பேசக்கூடிய தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்வது அடுத்த கட்ட அரசியல் நகர்வாக அமையவேண்டும்.
Q – உங்கள் அமைப்பு பிரான்ஸை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் உங்கள் அமைப்பின் செயற்பாட்டை விஸ்தரிப்பீர்களா?
பதில்: சில பிரதிநிதிகளை அங்கு நியமித்து செயற்பட்டு வருகின்றோம். அங்கு இடம்பெறுகின்ற விடயங்கள் தொடர்பான தகவல்களை பெற்று வருகின்றோம். பாரிய அளவிலான வேலைத்திட்டங்களை நாங்கள் அங்கு இன்னும் ஆரம்பிக்கவில்லை. எமது அமைப்பு நான்கு வருடங்களாக இயங்கி வருகின்றது. எதிர்வரும் காலங்களில் எமது பணிகளை இலங்கையில் விஸ்தரித்து அரசியல் கட்சிகள், அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம்.
Q – கடந்த முறை நடைபெற்ற ஜெனிவா கூட்டத் தொடரின் போது வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் சிலர் இங்கு வந்திருந்தார்கள். ஆனால் இம்முறை யாரும் வரவில்லையே?
பதில்: எதிர்வரும் காலங்களில் நாங்கள் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய இருக்கிறோம். காணிப்பிரச்சினை உள்ளது.
புத்தளத்தில் குப்பை பிரச்சினை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புத்தளத்தில் முஸ்லிம் மக்கள் மட்டும் வாழவில்லை. மாறாக தமிழ், சிங்கள மக்களும் வாழ்கின்றார்கள்.
இந்நிலையில் கொழும்பு குப்பைகளை அங்கு கொண்டு சென்று கொட்டுவது அந்த மக்களை ஒடுக்கும் செயற்பாடாகவே தெரிகின்றது. அந்தப் பிரதேச மக்கள் பாரிய அளவில் இதனை எதிர்த்தும் அரசாங்கம் இதனை வலுக்கட்டாயமாக செய்கின்றது என்றால் அது பாரிய கேள்விக்குறியாகவே அமைகின்றது.
இது தொடர்பிலும் நாங்கள் செயற்படவிருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் சம்பந்தமான விசேட அறிக்கையாளரிடம் இது தொடர்பாக அறிக்கைகளையும் தகவல்களையும் பரிமாறி வருகின்றோம்.
-Vidivelli
எதிர்கால திசை காட்டும் மிக முக்கியமான பேட்டி. இலங்கை சமூகத்திற்கான ஐரோப்பிய நிலையத்தின் பொதுச்செயலாளர் முயீஸ் வஹாப்தீன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் ஆதரவும்.