இந்தோனேஷியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவில் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் காரணமாக குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அடை மழை மற்றும் மண்சரிவுகளின் காரணமாக மாகாணத் தலைநகரான ஜயபுராவிற்கு அருகிலுள்ள சென்டானி நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரேஹோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
சென்டானி நகரில் 63 பேர் உயிரிழந்ததாகவும் அம்பேரா பிராந்தியத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும் பபுவா மாநிலத்திலுள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் ஜயபுராவிலுள்ள வைத்தியசாலையொன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நுக்ரேஹோ தெரிவித்தார்.
காணாமல் போயுள்ளோரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு இதுவரை போக முடியாதுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்புள்ளதாகவும் நுக்ரேஹோ தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் சுலாவெஸ்ஸி தீவில் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் காரணமாக 68 பேர் உயிரிழந்தனர்.
-Vidivelli