நியூஸிலாந்து நாட்டில் இரண்டு பள்ளிவாசல்களில் படுகொலை
உயிரிழப்புகள் 50 ஆக உயர்வு; மேலும் 50 பேர் காயம்; 12 பேரின் நிலை கவலைக்கிடம்
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 34 பேருக்கு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனினும் 12 பேரின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் நியூஸிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களுள் சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் அருகிலுள்ள சிறுவர் நல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தோரின் ஜனாஸாக்கள் நேற்று மாலை வரை கிறிஸ்ட்சர்ச் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. ஜனாஸாக்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட ரீதியான ஏற்பாடுகள் நிறைவு பெற்ற பின்னர் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கிறிஸ்ட்சர்ச் பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திய தீவிரவாதி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதான பிரென்டன் ஹரிசன் டரன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டு படுகொலை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதி, பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமில் நேரலை(லைவ்) செய்து கொண்டே துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை 3 ஆண்கள், ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் இதில் ஒருவர் மாத்திரமே இச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அந் நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வுடந் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகைக்காக தயார் நிலையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த குறித்த தீவிரவாதி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் ஏராளமானோர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
மிகவும் அமைதியான நியூஸிலாந்து நாட்டில் ஒரே நேரத்தில் இரு பள்ளிவாசல்களிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால்,அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கிறிஸ்ட்சர்ச் நகர் முழுவதும் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களை மூட பொலிஸார் உத்தரவிட்டனர். குழந்தைகள், மாணவர்களை பள்ளி, கல்லூரியில் இருந்து வீடு திரும்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, பொலிஸார் குவிக்கப்பட்டு, பள்ளிவாசலில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதியை துரத்திச் சென்று கைது செய்தனர்.
இச் சம்பவம் குறித்து கிறிஸ்ட் சர்ச் பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் கூறியதாவது:
” கிறிஸ்ட்சர்ச் பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ஆண்கள், ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேறு யாரும் ஈடுபட்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது.
இந்த தாக்குதலுக்குப் பின் மிகப்பெரிய அளவில் மற்றொரு தாக்குதல் நடத்த வாகனங்களில் வெடிபொருட்களையும் அவர்கள் நிரப்பி வைத்திருந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடாத்தும் வீடியோக்களை கண்டுபிடித்து நீக்கியுள்ளோம். வேறு யாரேனும் அந்த வீடியோ பகிர்ந்துள்ளார்களா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த வீடியோ உண்மையில் மனதை உறையவைக்கும் விதமாக இருந்தது. அதை மக்கள் யாரேனும் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
துப்பாக்கி ஏந்திய ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தது முதல் துப்பாக்கி சூடு நடத்துவதும், தப்பி ஓடுபவர்கள் மீது சுட்டு வீழ்த்துவதுமாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை ஆனால், இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்ரென் சனிக்கிழமை உரையாற்றுகையில், ” கிறிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. லிண்வுன்ட பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேரும், ஹக்லே பார்க் மசூதியில் 39 பேரும் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். இதை தீவிரவாத தாக்குதல் என்றுதான் அழைக்க வேண்டும். நீண்டகாலம் திட்டமிடப்பட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்தவர் ” எனத் தெரிவித்தார்.
வலதுசாரி தீவிரவாதி
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் கூறுகையில், ” நியூஸிலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு நாங்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கிறோம். இதில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் ஒரு வலதுசாரி தீவிரவாதி. இந்த தாக்குதலுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் ” எனத் தெரிவித்தார்.
மின்னஞ்சலில் அறிவித்த தீவிரவாதி
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், “கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த தாக்குதலை தொடுப்பதற்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் முன்னதாக அதுகுறித்த அறிக்கை ஒன்றை, எனக்கு உட்பட 30 பேருக்கு மின்னஞ்சல் செய்தார்” என்று கூறினார்.
இருப்பினும், அந்த மின்னஞ்சலில், தாக்குதல் நடத்தப்படுவதற்காக குறிப்பிட்ட காரணமோ அல்லது தாக்குதல் நடக்கவுள்ள இடம் பற்றிய தகவலோ குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மின்னஞ்சல் தனக்கு கிடைக்கப்பெற்ற இரண்டே நிமிடங்களில் அதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“இதை ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றுதான் கூற முடியும். நீங்கள் அனைவரும் அந்த தாக்குதல் காணொலியை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு நியூசிலாந்திலும் இந்த உலகத்திலும் இடமில்லை,” என நியூசிலாந்து பிரதமர் கூறினார்.
நியூஸிலாந்து மீதான எங்கள் நம்பிக்கையை அசைக்க முடியாது: இமாம்
தொழுகையில் ஈடுபட்ட ஏராளமான முஸ்லிம்களை கொல்வதன்மூலம் நாட்டின் மீதான எங்கள் நேசத்தை சிதைத்துவிடவோ நம்பிக்கையை அசைத்துவிடவோ முடியாது என படுகொலை சம்பவம் நடந்த பள்ளிவாசல் இமாம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து படுகொலை நடைபெற்ற கிறிஸ்ட் சர்ச் நகரின் லின்வுட் மசூதியைச் சேர்ந்த இமாம் இப்ராஹிம் அப்துல் ஹலீம் தெரிவித்ததாவது:
இப்போதும் நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம். எங்கள் நம்பிக்கையை அசைக்க முடியாது. பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அமைதியான தொழுகைக்கு மாறாக திடீரென அலறல் சத்தம் கேட்டது. ரத்தக்களறியில் சிலர் இறந்தனர். அப்போது எல்லோரும் தரையில் படுத்துவிட்டனர். சில பெண்கள் அழத் தொடங்கினர். சிலர் உடனடியாக இறந்துவிட்டனர். எங்கள் குழந்தைகள் இங்குதான் வாழ்கின்றனர். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றுதான் தெற்கு பசிபிக் நாடான நியூஸிலாந்தில் முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.
பெரும்பாலான நியூஸிலாந்து மக்கள் எங்களுக்கு அனைத்து விதமான ஆதரவையும் தர ஆர்வமாக உள்ளனர். முஸ்லிம் அல்லாத அந்நியர்கள் பலரும் எங்களைச் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் அளித்து வருகின்றனர். இது மிகவும் முக்கியமானது. இது எங்களுக்கு பலத்தைத் தரும்.
தொழுகையில் ஈடுபட்ட ஏராளமான முஸ்லிம்களைக் கொல்வதன் மூலம் நியூஸிலாந்து நாட்டின் மீதான எங்கள் நேசத்தைச் சிதைத்துவிடவோ சக மக்களோடு நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைத்து விடவோ முடியாது என இமாம் இப்ராஹிம் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
தீவிரவாதியை தடுத்த நபர்
பள்ளிவாசல்கள் மீது கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஒருவர் இறுக்கமாகப் பிடிக்காதிருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் படுமோசமாக இருந்திருக்கும் என்று நேரில் பார்த்த ஒருவர் இந்தியத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
இந்நிலையில் நேரில் பார்த்த நபர் கூறும்போது, “நாங்கள் சிறிய பள்ளியில் இருந்தோம். 100 சதுரமீட்டர்கள்தான் இருக்கும். அப்போது துப்பாக்கி ஏந்திய மர்மநபர் பள்ளிக்குள் வந்து சுடுகிறார் என்றால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, உயிரைக்காப்பாற்றிக் கொள்ளத்தான் தோன்றும் இது மனித இயல்பு. ஆனால் நானும் என் நண்பனும் நேரில் பார்த்த காட்சி எங்களை பிரமிக்க வைத்தது. ஒரு நபர் தைரியமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவனை பின்புறமிருந்து இறுக்கப் பிடித்தார், அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை, துப்பாக்கியை கீழே போடும்வரை அவர் பிடி தளரவில்லை.
அவர் பிடித்ததையடுத்து துப்பாக்கி கீழே விழுந்ததால் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கதவை நோக்கி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது, இது மட்டும் நடக்கவில்லையெனில் இன்னும் பலர் கொல்லப்பட்டிருப்பார்கள். நானும் இப்போது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்க மாட்டேன். அந்த மனிதனுக்கு நன்றிகள் பல. அவர் யார் என்று நிச்சயம் கண்டுபிடிப்போம்.
நான் யாருக்காகவும் பேசவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த அழகான நாட்டில் வசித்து வருகிறேன். இங்கு நமக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை, இல்லவேயில்லை. ஆகவே ஒரு சம்பவத்தை வைத்து இந்த நாட்டைப் பற்றி நான் கருத்து கூறுதல் கூடாது.
நான் நியூஸிலாந்தை நேசிக்கிறேன், இங்கு வாழும் மக்களை நேசிக்கிறேன். நியூஸிலாந்து மக்களிடமிருந்துதான் எனக்கு இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நலம் விசாரித்து அதிக அழைப்புகள் வந்தன” என்கிறார் பைசல் சையத் என்கிற இந்த நபர்.
பல நாடுகளைச் சேர்ந்தோர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறியவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா,எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சிலரது ஜனாஸாக்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளன.
உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி
கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறினர்.
“நாங்கள் அனைவரும் துப்பாக்கிதாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இச் சம்பவத்தையடுத்து பங்களாதேஷ் அணி பங்கேற்கவிருந்த கிரிக்கெட் போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டன.
பள்ளிவாசல்களுக்கு பூட்டு
தாக்குதல்கள் இடம்பெற்ற கிறிஸ்ட்சர்ச் டீன்ஸ் வீதி, மஸ்ஜிதுந் நூர் மற்றும் கிறிஸ்ட்சர்ச் லின்வூட் பள்ளிவாசல் ஆகியன பூட்டப்பட்டுள்ளதுடன் இப் பள்ளிகளில் மக்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நியூஸிலாந்து முழுவதிலுமுள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் அனுதாபம்
இத் தாக்குதலினால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள நியூஸிலாந்து மக்கள் பள்ளிவாசல்களின் முன்னால் ஒன்றுதிரண்டு தமது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். பள்ளிவாசல்களுக்கு வெளியே மலர்ச் செண்டுகளை அடுக்கியும் அதில் முஸ்லிம்கள் மீதான தமது அன்பை வெளிப்படுத்தும் வாசகங்களை எழுதியும் தமது அனுதாபத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மேற்கு நாடுகளிலும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு
இத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜும்ஆவின் போது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களை அடுத்து வரும் நாட்களில் விடிவெள்ளியில் எதிர்பாருங்கள்)
-Vidivelli