சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடங்கி ஒன்பது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 2018 இல் அதி கூடிய சிறுவர்கள் சிரியாவிலேயே உயிரிழந்துள்ளனர் என யுனிசெப் அமைப்பு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.
எட்டு ஆண்டுகளை விடவும் கடந்த ஆண்டிலேயே சிறுவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் ஆபத்துக்களை எதிர்நோக்கியதாக யுனிசெப் அமைப்பின் பெண் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹென்ரியென்டா போ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் மாத்திரம் மோதல்களின் போது 1,106 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை யுத்தம் ஆரம்பமானதிலிருந்து ஒரு ஆண்டில் ஏற்பட்ட அதிகூடிய உயிரிழப்பாகும். இந்த எண்ணிக்கை வெறுமனே ஐக்கிய நாடுகள் சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாகும், ஆனால் உண்மையான உயிரிழப்புக்கள் இதைவிட அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் மீது 2018 ஆம் ஆண்டு 262 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அதி கூடிய எண்ணிக்கை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் மாத்திரம் வடமேற்கு சிரியாவிலுள்ள இட்லிப்பில் இடம்பெற்றுவரும் தீவிர வன்முறைகள் காரணமாக 59 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சூனியப் பிரதேசங்களில் வாழும் சிறுவர்களும் குடும்பங்களும் நிர்க்கதி நிலையில் காணப்படுகின்றனர். ஜோர்தானிய எல்லைக்கருகிலுள்ள ருக்பானில் வாழும் குடும்பங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உணவு, தண்ணீர், உறைவிடம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி நிலை காரணமாக மிகுந்த ஏமாற்றத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-விடிவெள்ளி