ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் புறநகர்ப்பகுதிகளில் உள்ள நீல நிறத்திலான பேருந்து நிலையங்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இது நடமாடும் நூலக சேவை ஒன்றுடன் இணைந்த பேருந்து நிலையங்கள் ஆகும். வெகு சீக்கிரத்திலேயே சிறுவர்களை இந்த நடமாடும் பேருந்து நூலகம் கவர்ந்துள்ளது. குறித்த நடமாடும் பேருந்து நூலகம் சிறுவர்களை உரிய நேரத்தில் ஏற்றிச்சென்று பின்னர் கொண்டுவந்து விடுகிறது. இந்த நூலகத்தின் மூலம் காபூல் சிறுவர்கள் புதிய அனுபவத்தைப் பெற்றிருப்பதோடு தமது அறிவு, விவேகம் மற்றும் சிந்தனை ஆற்றல் என்பவற்றையும் வளர்த்துக்கொண்டுள்ளனர்.
இந்த நடமாடும் நூலகம் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் மிகக்குறுகிய காலத்தில் காபூல் நகரம் முழுவதும் பேசப்படும் ஒரு விடயமாக மாறிவிட்டது.
காபூல் நகரத்திலுள்ள நான்கு சமூகங்களுக்கும் இந்த நூலகத்தின் சேவை கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் எல்லா பேருந்து நிலையங்களிலும் இரண்டு மணித்தியாலங்கள் இந்த பேருந்து நூலகம் தரித்து நிற்கும்.
“அனைவரினதும் சிந்தனை ஆற்றலை வளர்ப்பதே இந்த நடமாடும் நூலகத்தின் பிரதான இலக்காகும். இது எமது கல்வி முறையில் அல்லது சமூகத்தில் ஒரு உயர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம்” என இந்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்த 26 வயதான சகோதரி பிரெஸ்டா கரீம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிறுவர்கள் உலகளாவிய கதைகளை வாசிக்கும்போது பல்வேறு விடயங்களை தெரிந்து கொள்கிறார்கள். அத்துடன் சிந்திக்கும் திறனை விருத்தி செய்துகொள்வதோடு உள்ளார்ந்த ஆற்றலையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
நாங்கள் ஒரு வருடமாக சிறுவர்களுடன் பணிபுரிகிறோம். இதிலிருந்து சிறுவர்கள் மிகவும் அழுத்தமான உணர்ச்சிகளைக் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களிடம் அதிகமாக உற்சாகமும் அறிவுத்தாகமும் காணப்படுகிறது. சிறுவர்கள் அதிகமாக முதலிட தகுதியுடையவர்கள். அந்த வகையில் கல்வி என்பது நாம் முதலீடு செய்யவேண்டிய விடயங்களுள் ஒன்று ஏனென்றால், அது தான் எமது நாட்டை மாற்றும்.
சிந்தனை ஆற்றலை மேம்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்ட இந்த நடமாடும் நூலகத்தில் இதுவரை 40,000 இற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்த நூலகத்தின் மூலம் பயனடைகிறார்கள்.
இந்த நூலகத்துக்கான அதிகமான புத்தகங்கள் நிதியுதவிகள் மூலமே கிடைக்கப் பெறுகின்றன. கிடைக்கப்பெறும் புத்தகங்கள் மூன்று நூலகப் பொறுப்பாளர்களால் தரம்பிரிக்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் காபுல் நகரத்தைச் சேர்ந்தவர்கள் நடமாடும் பேருந்து வண்டியில் புத்தகங்களை வாசிப்பதற்கு தமது பிள்ளைகளை அனுப்ப அச்சம் கொண்டார்கள். தற்போது இந்த நூலகத்தின் பெறுமதியை பெற்றோர்கள் உணர்ந்துள்ளதோடு இங்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த நூலகத்தின் கட்டமைப்பை அவதானித்த அந்நாட்டின் கல்வி அமைச்சு, இது போன்ற வசதிகளை பாடசாலைகளிலும் ஏற்படுத்தவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
நன்றி: அல்ஜெஸீரா
-Vidivelli