எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்மான விமானத்தில் பயணித்த 21 ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்களும் பலியானதாக சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்தார்.
உலக அனர்த்தம் எமது வீட்டினையும் பாதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இந்தத் துக்கத்தினை பகிர்ந்து கொள்வதில் ஒன்றிணைகின்றது என நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் வைத்துத் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எத்தியோப்பிய தலைநகரிலிருந்து புறப்பட்ட ET – 302 ரக விமானம் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதை அடுத்து அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த எமது நண்பர்கள் ஆண்களும் பெண்களுமாக உலகின் பல பாகங்களையும் சேர்ந்த பரந்துபட்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என குட்ரெஸ் தெரிவித்தார். அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரேயொரு பொதுவான நோக்கம் உலக மக்களுக்கு சேவையாற்றுவதும், எம்மனைவருக்கும் சிறந்த இடத்தை உருவாக்குவதுமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விமான விபத்தினைத் தொடர்ந்து எத்தியோப்பிய விமான சேவை போயிங் 737 – 8 மெக்ஸ் விமானத் தொகுதிகளை மறு அறிவித்தல் வரை சேவையில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்தியுள்ளது.
விபத்திற்கான காரணம் எதுவென அறியக்கிடைக்காத போதிலும், மேலதிகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த தொகுதி விமானங்களை சேவையில் ஈடுபடுத்தாதிருப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம் என எத்தியோப்பிய விமான சேவை அறிவித்துள்ளது.
இவ் விமானம் கடந்த நவம்பர் மாதம் பெற்றுக்கொள்ளப்பட்டது. விபத்து ஏற்படுவதற்கு முன்னதான அவ்விமானத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் எவையும் காணப்படவில்லை எனவும் பிரதம நிறைவேற்றதிகாரி டிவெல்டே கெப்ரிமேரியம் தெரிவித்தார்.
-Vidivelli