மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று அதிகாலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 12 மணிக்குப் பின்னரே மாகாண சபை உறுப்பினர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.50 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும்போது வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டதாகவும் உடனே எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் தீப்பற்றியிருந்த நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்தேன் என மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார். பின்னர் 3.10 மணியளவில் மட்டக்குளி பொலிஸார் தாக்குதலுக்குள்ளான வீட்டிற்கு வந்துள்ளனர். அத்துடன், பொலிஸ் மோப்பநாய் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து மாகாண சபை உறுப்பினர் தெரிவிக்கையில், ஏற்கெனவே இரண்டு தடவைகள் என் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு தடவை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்திருக்கிறார். இது மூன்றாவது முயற்சியாகும். வடகொழும்பில் வளர்ந்து வரும் அரசியல்வாதி என்ற வகையில் என்மீது சிலர் பொறாமை கொண்டு அரசியல் ரீதியில் படுகொலை செய்ய முயற்சிப்பதாக கருதுகிறேன். என்னை பயமுறுத்துவதற்காகவே இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
-Vidivelli