பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து புல்வாமா தாக்குதலுக்குப் பின்னரான பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளித்தார்.
இச்சந்திப்பின்பொழுது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையினை பாகிஸ்தான் விரும்புவதாகவும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வைக் காணமுடியுமெனக் கூறினார். மேலும் எந்தவிதமான வெளி ஆக்கிரமிப்பிலிருந்தும் பாகிஸ்தான் தனது பூமியினை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது எனவும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
எல்லையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற அணுகுமுறைகளை சுட்டிக்காட்டியதுடன், காஷ்மீர் உட்பட இந்தியாவுடன் நிலவும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகத்தினால் வழங்கப்படுகின்ற ஆதரவினை பாகிஸ்தான் பெரிதும் வரவேற்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாகிஸ்தானின் அணுகுமுறையினை ஏற்றுக்கொண்ட இலங்கை பிரதமர், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கிடையிலான அபிவிருத்தியடையும் சுமுகமான நிலைமையினை ஆழ்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்தார்.
நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு பதற்றங்கள் அதிகரிக்கக் கூடாதெனத் தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இருநாடுகளும் பிராந்தியத்தில் சமாதானத்தினை நிலைநாட்டுவதன் நிமித்தம் அர்த்தபுஷ்டியான பேச்சுவார்த்தைகளுடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் என நம்பிக்கை வெளியிட்டார். நெருக்கடியான தருணத்தில் தனது இராஜதந்திரம் மற்றும் மதிநுட்பத்தினை இம்ரான் கான் வெளிப்படுத்தியுள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாகிஸ்தானிய பிரதமரை இதன்போது பாராட்டினார்.
-Vidivelli