- எம்.எம்.ஏ.ஸமட்
வாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஓர் அடிப்படை உரிமையாகும். ஒரு தனிநபர், ஒரு சமூகம் என அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் பாதுகாப்பு உண்டு என உலக மனித உரிமைகள் சான்றுரை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. அந்தவகையில் இந்நாடும் இந்நாட்டில் வாழும் உரிமையும் அனைத்து இன மக்களுக்குமுள்ளது.
ஆனால், இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில், பெரும்பான்மையாக பௌத்த சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது புள்ளிவிபரங்களின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனைய இனத்தவர்கள் வந்தேறு குடிகளல்ல.
இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். இந்நாடு அவர்களுக்கும் சொந்தம். அவர்கள் அனைவரும் சகல உரிமைகளும் பெற்று இம்மண்ணில் வாழ்வதற்கு கௌரவமானவர்கள். ஆனால், காலத்திற்குக் காலம் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை கேள்விக்குட்படுத்தப்படுகிறது.
தெற்கில் ஆண்டாண்டு காலம் நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழும் சிங்கள – முஸ்லிம் மக்களின் சகவாழ்வைச் சீர்குழைத்து இனமுறுகலை ஏற்படுத்தும் கைங்கரியங்களை பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள வங்குரோந்து அரசியல்வாதிகளும், பௌத்த சிங்கள கடும்போக்காளர்களும், இவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் துணைநிற்கும் சில ஊடகங்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்திருப்பதை வரலாற்று நெடுகிலும் காண முடியும்.
இவ்வாறே, வடக்கிலும், கிழக்கிலும் தொன்றுதொட்டு ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களை ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு நோக்கச் செய்தும் விட்டுக்கொடுப்புக்களையும் புரிந்துணர்வுகளையும் இல்லாமலாக்கியும் தமிழனா, முஸ்லிமா என்று சிந்திக்கச் செய்ததும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற சக்திகள்தான் என்பது வெள்ளிடைமலை.
சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லிம்களும் ஆண்டாண்டு காலமாக இம்மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இத்தேசத்தைக் கௌரவப்படுத்தியிருக்கிறார்கள். இந்நாட்டுக்காக உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களால் இந்த தேசம் மாண்பு பெற்றிருக்கிறது என்பதை பெரும்பான்மை சமூகத்திலுள்ள பலர் ஏற்றுக்கொண்டிருந்தாலும், பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சிறுபான்மையினருக்கு எதிரான சக்திகள் இவ்வுண்மைகளை மறைத்து, இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற போலிப் பிரசாரங்கள் காலத்திற்குக் காலம் முன்னெடுக்கப்படுவது அவதானத்திற்குரிய விடயமாகும்.
இவ்வாறான சக்திகளின் போலிப் பிரசாரங்களின் மூலம் பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள அப்பாவி இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட தூண்டப்பட்டதன் எதிரொலிதான் 2014இல் அளுத்கம தாக்குதல் முதல் 2018 இல் கண்டி, அம்பாறை உள்ளிட்ட பிரதேசங்கள் வரை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் என்பதை மறக்க முடியாது. இச்சம்பவங்கள் முஸ்லிம் தேசியத்தின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தியது மாத்திரமின்றி, வாழ்வாதாரத்துக்கும் பேரிடியை ஏற்படுத்தியதை கண்டி, அம்பாறை வன்முறைகளின் ஓராண்டு நினைவு நாட்களில் ஞாபமூட்ட வேண்டியுள்ளது.
கடந்த காலமும் கசப்பான உண்மைகளும்
முஸ்லிம்களின் வளர்ச்சி பேரினவாதத்தின் கழுகுக்கண்களை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் தொட்டுக் குத்திக்கொண்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியை அழிப்பதே பேரினவாதத்தின் இலக்கு என்பதை 1915ஆம் ஆண்டு இடம்பெற்ற கம்பளைக் கலவரம் முதல் அம்பாறையிலும், கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் மற்றும் நாட்டின் இதர பிரதேசங்களிலும் அரங்கேற்றப்பட்ட இனவெறியாட்டம் நன்கு புலப்படுத்தியிருந்தது.
இதனால், இலங்கை முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடு என சர்வதேச மன்னிப்புச் சபை கூட அறிக்கை விடுவதற்கு வழிவகுத்ததோடு, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் வாழ்வாதாரத்திற்கும் வாழ்வுரிமைக்கும் ஏற்பட்ட பேரிடியாகவும் நோக்கப்பட்டது.
தமிழ் சமூகம் கல்வியில் முன்னேறிக் காணப்பட்டதொரு காலகட்டத்தில் இச்சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, உரிமைகளை மறுத்து அப்பாவி இளைஞர்களை ஆயுதப்போராட்டத்துக்கு இழுத்துச் சென்றது பேரினவாதிகளின் இருண்ட மனப்பாங்குதான்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை 30 வருட கால அழிவுகளைச் சந்திக்கச் செய்த பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள வங்குரோத்து அரசியல்வாதிகளும், கடும்போக்காளர்களும் இவர்களை ஊக்கப்படுத்தும் சில ஊடகங்களும், முஸ்லிம்களின் கலை, கலாசார, மதப் பண்பாட்டு விழுமிய வாழ்க்கை முறையிலும், ஏனைய கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களிலும் வேண்டுமென்றே மூக்கை நுளைத்ததையும் வரலாற்றில் அவதானிக்கலாம்.
முஸ்லிம்கள் குறித்தான தப்பபிப்பிராயங்களை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட கடந்த கால சம்பவங்கள் அநேகமுள்ளன.
அவற்றில். 2014இல் அளுத்கம தாக்குதல் சம்பவம் முதல் அம்பாறை, கண்டி வன்முறைகள் வரை மேற்கொள்ளப்பட்ட இனவெறியாட்டங்கள் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும் கேள்விக்குட்படுத்தி பாதுகாப்பற்ற நிலைமைகளுக்குத்தள்ளிய வரலாற்றிலிருந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் நூறு வீதம் மீளவில்லை.
அளுத்கம, கிந்தோட்டை தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களில் பலர் இன்னும் அவர்களின் பழைய வாழ்வாதர நிலைகளுக்கு மீளச் செல்லவில்லை என்பதுபோல கண்டி,திகன, அம்பாறைத் தாக்குதல்களில் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் இன்னும் முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாதவர்களாக உள்ளதாக அவர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது.
2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆட்சியில் 2015 முதல் 2018 ஒக்டோபர் ஆட்சிப் புரட்சி நடந்த நாள் வரை இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பக்கம் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை விரைவாகப் பெற்றுக்கொடுக்க அவர்களால் , கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் வினைத்திறன் மிக்கதாக இருக்க வில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கமாகும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் அரசாங்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தும் கூட இவ்விரு கட்சிகளும் அச்சந்தர்ப்பத்தை தவறவிட்டன என்ற பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் குற்றச்சாட்டை மறுக்கவும் முடியாதுள்ளது.
முஸ்லிம்களின் அதிருப்தியும் வரவு – செலவுத் திட்டமும்
அளுத்கம முதல் அம்பாறை வரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பினும், இந்நடவடிக்கைகளில் பல முஸ்லிம்கள் திருப்தி அடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அளுத்கம, கிந்தோட்டை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நஷ்ட ஈடுகளும் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட சிறு தொகை இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள மாட்டை மலையில் சாய்க்கும் சிரமத்தை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப்பட்டதில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில், அம்பாறையிலும், திகன உட்பட கண்டி மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு முழுமையாக எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் எழுப்பும் இச்சந்தர்ப்பத்தில் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ரூபா ஒதுக்கம், யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒதுக்கம், இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஷ்டஈட்டினை துரிதமாக வழங்க நடவடிக்கை என வரவு செலவுத் திட்டத்தில் வாசிக்கப்பட்டுள்ள போதிலும் செயற்கை அனர்த்தமாகக் கருதப்படும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட கண்டி, திகன மற்றும் அம்பாறைப் பிரதேசங்களின் அபிவிருத்தி அல்லது நஷ்டஈட்டை துரிதப்படுத்தல் என்ற வாசகங்கள் வாசிக்கப்படவில்லை என்பது பாதிக்கப்பட்ட பிரதேச முஸ்லிம்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. இந்நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அடங்கலாக பலர் இவ்வரவு செலவு திட்ட வாசிப்பை வரவேற்று கருத்துக்களை வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.
இச்சந்தர்ப்பத்தில் கண்டி, திகன இன வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கான இழப்பீட்டை தாமதமின்றி வழங்க வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரிடம் கோரியுள்ளதாகவும் இழப்பீடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஊடகங்களில் காண முடிந்தது. தாக்குதல்கள் நடந்து ஒரு வருடம் நிறைவடைந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்குவதில் இவ்வளவு தாமதம் ஏன்? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்புவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இன வெறி வன்முறையாளர்களின் வன்முறைகள் ஏற்படுத்திய அழிவுகள் கடந்த ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்ததைப் போன்றே 2015ஆம் ஆண்டின் பின்னர், கிந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் கடந்த வருடம் அம்பாறையிலும், திகனை, தெல்தெனிய, கட்டுகஸ்தோட்டை, அக்குறணை என பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கும் அதன் அழிவுகளுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தரவாதங்களிலும், பாதுகாப்பிலும் நம்பிக்கையீனத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் என்பது வரலாற்றில் மறக்கப்படாத பதிவு என்பதை இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டதை ஞாபகமூட்ட வேண்டியுள்ளது.
இதற்கான நிவாரணம் வழங்கும் நடைமுறை அல்லது கால தாமதம் என்பவற்றில், அரசாங்கம் மாத்திரமின்றி முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகினர். நேரடியாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும், அரசியல் பிரமுகர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தாலும், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அவர்களது சக்திக்குட்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்ற கருத்துக்களும் நிலவுகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்றத்தின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்தியதைக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது சக்தி உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்தனர் என்று கூறப்படுகிறது.
கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கு மாத்திரமின்றி இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களிடையேயும் வாழ்வுரிமைக்கான அச்சம் அக்காலத்தில் நிலவியது. இந்த அச்சம் சில வாரங்கள் நீடித்தன. அச்சத்தினுடனான இயல்பு வாழ்வைப் பாதிக்கச் செய்த சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த முக்கிய சூத்திரதாரி உட்பட சிலர் 52 நாள் ஆட்சிக் காலத்தில் விடுதலை செய்யப்பட்டமை அறிந்த விடயமாகும்.
2014 முதல் 2018 வரை இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட்டாலும் முஸ்லிம்கள் உளவியல், சமூக, பொருளாதார, வாழ்வுரிமை ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர். இப்பாதிப்புக்களிலிருந்து அவர்கள் மீள்வதற்கு பல மாதங்கள் கடந்தன. இருப்பினும், அழிக்கப்பட்ட வாழ்வாதரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இந்நாள் வரை பலர் சிரமங்களைச் சுமந்து கொண்டு வாழ்வதோடு இன்னும் பலர் அழிக்கப்பட்ட இல்லங்களை புனரமைக்க முடியாமலுமுள்ளனர். அந்த நிலையில்தான் பள்ளிவாசல்களும் காணப்படுவதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், எதிர்காலம் தொடர்பில் முஸ்லிம்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்திருக்கும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சமூகத்தின் உரிமையினை எந்த விட்டுக்கொடுப்புக்களும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று அண்மையில் சம்மாந்துறையில் நடைபெற்ற வைபவமொன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அடிப்படை உரிமையான வாழ்வுரிமை வன்முறைகளினால் கேள்விக்குட்படுத்தப்படுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட நிலையில் வாழ்வுரிமையும் கேள்விக்குட்பட்டது. ஏற்படுத்தப்பட்ட அழிவுகளும், அச்சுறுத்தல்களும் மீண்டும் ஏற்படாது வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலை எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் எதிர்காலத்தில் ஏற்பாடதிருக்க உரிய நடவடிக்கைகளை சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பதும் கடப்பாடாகும். இந்நிலையில், எதிர்காலம் தொடர்பில் முஸ்லிம்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்திருக்கும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சமூகத்தின் உரிமையினை எந்த விட்டுக்கொடுப்புக்களும் இல்லாமல் பாதுக்காக்க வேண்டும் என்று ஒரு சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியதாக உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டும்.
-Vidivelli