இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட தமது காணிகளை ஒப்படைக்குமாறு கோரிக்கை
காணி உரிமையாளர்கள் நேரில் சென்றும் பார்வையிட்டனர்
இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்ட தமது காணிகளை பார்வையிடுவதற்காக அட்டாளைச்சேனை அஷ்ரஃப் நகர் பிரதேச மக்கள் நேற்று முன்தினம் மாலை சென்றிருந்தனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைவாக வட-கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருந் தொகையான காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அஷ்ரஃப் நகர்ப் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 39 ஏக்கர் காணிகள் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் அக்காணிகளுக்கான ஆவணங்கள் இராணுவ உயரதிகாரிகளால் கையளிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்குப் பின்னர், இக்காணி விடுவிப்பு சம்பந்தமாக எவ்வித தகவல்களும் தமக்கு அறிவிக்கப்படாமல் உள்ளதாகவும், ஏனைய பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும் காணிகளுக்குள் உரிமையாளர்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள் ஏனைய பிரதேச மக்கள் போல் தமக்கும் சட்ட ரீதியான நடைமுறையினை பின்பற்ற அனுமதிக்க வேண்டுமென குறிப்பிடுகின்றனர்.
அஷ்ரஃப் நகர்ப் பிரதேசத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி மக்கள் பாதுகாப்பினை மையப்படுத்தி இப்பகுதியில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. சுமார் 59 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம் அமையப் பெற்றதாகவும், அந்நிலப்பரப்பில் 39 ஏக்கர் காணியினை அண்மையில் இராணுவத்தினர் விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், குறித்த சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அஷ்ரஃப் நகர் பிரதேச மக்களுக்குச் சொந்தமான சுமார் 150 ஏக்கர் காணி இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழும், வன இலாகா உள்ளிட்ட அரச துறையின் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சொந்த நிலங்களை இழந்து உறவினர்களின் இல்லங்களில் வசித்து வரும் தமக்கு விடுவிக்கப்பட்ட காணிக்குள் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-Vidivelli