முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் மீது சாய்ந்தமருதில் தாக்குதல்
மு.கா. உறுப்பினரின் வீட்டுக்கும் கல் வீச்சு
- எம்.எம்.ஏ.ஸமட், அஸ்லம் எஸ்.மௌலானா
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் வாகனம் மற்றும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் வீடு என்பன நேற்றுமுன்தினம் இரவு தாக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த வீட்டின் கதவு, ஜன்னல்களும் வாகனத்தின் பின் கண்ணாடியும் சேதமடைந்துள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது 11ஆம் பிரிவுக்கான குழுக்கூட்டம் பிரதேச அமைப்பாளரான முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் வீட்டில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சமீபமாக வைத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் வாகனம் தாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் இருவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு வீட்டுக்கு சேதம் விளைவித்தோர் சி.சி.டி.வி. மூலம் அடையாள காணப்பட்டிருப்பதாகவும் இவர்களது பெயர் விபரங்களை பொலிசாருக்கு வழங்கியிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் காரணங்களுக்காக எனது வாகனம் தாக்கப்பட்ட சம்பவமானது எனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற உறவினை ஒருபோதும் பாதிக்காது என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் பிர்தௌஸின் தாயாரின் வீட்டில் கட்சியின் வட்டாரக் கிளைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு நான் சமுகமளித்தபோது, பிழையாக வழிநடத்தப்பட்ட சில இளைஞர்கள் கூட்டத்தைக் குழப்பிக்கொண்டிருந்த நிலையில் எனது வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனால் எனது வாகனத்தின் பின் கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.
ஒருபக்கம் இனவாதத்தாலும் மறுபக்கம் பிரதேசவாதத்தினாலும் அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கின்ற கல்முனையின் அடையாளம் இன்னும் சில காலங்களுக்காவது பாதுகாக்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணங்களுடன் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற எனது பயணத்தில் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.
கல்முனையின் அடையாளமும் முஸ்லிம் தேசியத்தின் எதிர்காலமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த விடயங்களாகும். இளைஞர் சமுயதாயத்தை பிழையாக வழிநடத்துபவர்கள் எவ்விதமான போர்வையில் இருந்தபோதும், சமூகமும் எதிர்காலமும் அவர்களை திட்டவட்டமாக சரியாகக் கணிக்கும். இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்தவேண்டும்.
-Vidivelli