காணாமல் போனோரின் பிரச்சினை: தீர்வுகள் எட்டப்படும் வரை கொடுப்பனவை அதிகரிக்குக
சபையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி வலியுறுத்து
காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை அவர்களின் உறவுகளுக்கு வழங்கப்படவுள்ள ஆறாயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரித்து வழங்க வேண்டுமென கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் மலசல கூடங்கள் இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர் என சபையில் நாம் பேசுவதையிட்டு வெட்கப்படவேண்டும். எனினும் இந்த வரவு செலவுத்திட்டத்த்தில் மலசல கூட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3600 மலசல கூடங்களை அமைக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இவ் வரவு செலவுத்திட்டத்தில் காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை அவர்களின் உறவுகளுக்கு 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த அறிவிப்பு இதுவாகும். எனினும் இத்தொகை போதாது. 6000 ரூபா கொடுப்பனவை மேலும் அதிகரிக்க வேண்டும். அத்துடன் மேலதிகமாக ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுமெனவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தியைப் பொறுத்தவரையில் அது இன்னமும் வடக்கு, கிழக்கு மாகாணத்தை முழுமையாகச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். எனவே இந்த 6 இலட்சம் பேரில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதேவேளை வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலும் இவ்வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களுக்கு புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேவேளை வடக்கு மக்களுக்கு 15000 வீடுகள் அமைத்துக்கொடுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. வடக்கு மக்களின் வீட்டுத் தேவைகளைப்பொறுத்தவரையில் இது மிகவும் சிறிய தொகையாகும்.
கொழும்புக்குப்பை கூளங்களை புத்தளம் அறுவாக்காட்டுக்கு கொண்டு சென்று கொட்டும் அரசின் திட்டத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் .இத்திட்டத்துக்காக அரசு 7000 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. கொழும்புக் குப்பைகளை புத்தளம் அறுவாக்காட்டுக்கு கொண்டுசெல்லும் திட்டத்தின் பின்னால் பாரிய வர்த்தகம் உள்ளது. கொழும்புக் குப்பைகளை 300கிலோமீற்றருக்கு அப்பால் ஏன் கொண்டு செல்லவேண்டும்? கொழும்பிலிருந்து புத்தளம் அறுவாக்காட்டுக்கு குப்பை கொண்டு செல்வதற்கான வாகனக் கூலிகளிலிருந்து இவ்வர்த்தகம் ஆரம்பிக்கின்றது.
இத்திட்டத்தின் மூலம் யாருக்கு தரகுப்பணம் கொடுக்கப்போகின்றீர்கள், யாரை வளப்படுத்தப் போகின்றீர்கள் எனப் பிரதமரிடம் கேட்க விரும்புகின்றோம். குப்பைகளை ப்பயன்படுத்தி மின்சாரம் பெறக்கூடிய வழிமுறைகள் இருந்தும் அவ்வாறு செய்யாது புத்தளம் அறுவாக்காட்டுக்கு தினமொன்றுக்கு 1200 மெற்றிக்தொன் குப்பைகளை கொண்டு சென்று கொட்டும் திட்டத்தின் பின்னணி என்ன? இவ்விடயத்தில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்க மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். உங்களால் இக்குப்பைப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது விட்டால் அந்த வேலையை எம்மிடம் ஒப்படையுங்கள். நாங்கள் உங்களுக்கு அந்தக்குப்பைகளிலிருந்து மின்சாரம் பெற்றுத்தருகின்றோம் கொழும்புக் குப்பைகளை புத்தளம் அறுவாக்காட்டுக்கு கொண்டுவரும் அரசின் திட்டம் தங்களை அழிக்கும் திட்டமென அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் 95 வீதமானவர்கள் முஸ்லிம் மக்கள். எனவே தயவு செய்து இந்த அநியாயத்தை செய்யாதீர்கள். இதனை செய்ய நாம் அனுமதிக்கவும் மாட்டோம் என்றார்.
-Vidivelli