ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40 ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பாக தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கலப்பு நீதிமன்றமொன்றினை அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டுமென அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இலங்கை மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அலுவலகம் ஒன்றினை கொழும்பில் நிறுவவேண்டும். இதற்கான அழைப்பினை இலங்கை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அலுவலகம் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஆலோசனை வழங்குவதுடன் தொழிநுட்ப உதவிகளையும் வழங்கும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையை அரசாங்கம் ஒரு சாதாரண அறிக்கையாக மதிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. இலங்கையில் இறுதியுத்தத்தின்போது இடம் பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டு மென்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துமாறு கோரப்பட்டது. 2013 இலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அன்றைய அரசாங்கம் இக்கோரிக்கையில் கரிசனை செலுத்தாததன் காரணமாகவே சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்கள் முன் எழுந்தன. அப்போதைய ஆணையாளர் அல் ஹுசைன் இலங்கை விவகாரம் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு பொறுப்புக்கூறும் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டது அத்தோடு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணைக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டதையடுத்து இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசு இதில் அக்கறை செலுத்தாததால் மீண்டும் கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
அரசாங்கங்கள் பொறுப்புக்கூறும் விடயத்தை அலட்சியம் செய்து வந்ததினாலேயே இந்நிலைமை உருவாகியிருக்கிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் காத்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறுதி யுத்தத்தின் போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மாத்திரமல்ல 1990 களில் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணப்படுவதுடன் அவர்களது மீள்குடியேற்றங்களுக்கான பொறிமுறையையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வடிவமைக்க வேண்டும். இதற்காக வடக்கிலிருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 3 தசாப்தங்களாகக் காத்திருக்கின்றார்கள்.
பதவியிலிருந்த, பதவியிலிருக்கும் அரசாங்கங்கள் பொறுப்புக் கூறும் விடயத்தில் அக்கறை செலுத்தத் தவறியமையே மீண்டும் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அரசாங்கம் தனது உறுதிமொழியை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் கலப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
இதேவேளை இலங்கையின் பிரச்சினைகளை இலங்கையே தீர்த்துக் கொள்வதற்கு அனுமதிக்குமாறு ஐ.நா மனித உரிமைப்பேரவையிடம் கோரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜெனிவாவுக்கு மூன்றுபேர் கொண்ட குழுவொன்றினையும் ஜனாதிபதி அனுப்பிவைக்கவுள்ளார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மாரப்பன தலைமையில் மற்றுமொரு குழுவும் ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
2015 இல் ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை மேலும் காலஅவகாசம் கோரவுள்ளது. அரசாங்கம் தொடர்ந்தும் காலஅவகாசம் கோரிக்கொண்டிருப்பதைத் தவிர்த்து பரிந்துரைகளை உடன் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும்.
-Vidivelli