கடந்த சனிக்கிழமை சிரியாவின் வடமேற்கு இட்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 4 பொதுமக்கள் உயிரிழந்ததாக வெள்ளைத் தலைக்கவச சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இட்லிப்பின் ஜிஸ்ர் அல்-சுகுர் மாவட்டத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை தேடிக் கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு அணியினரை இலக்கு வைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தலைக்கவச சிவில் பாதுகாப்பு முகவரகத்தின் தலைமை அதிகாரி முஸ்தபா ஹஜ் யூஸுப், துருக்கிய செய்தி நிறுவனமான அனடொலு முகவரகத்திற்குத் தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு தொண்டர் ஒருவர் உட்பட நான்கு பொதுமக்கள் இத் தாக்குதலில் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு சிவில் பாதுகாப்பு தொண்டர்கள் பாரதூரமாகக் காயமடைந்ததாகவும் ஹஜ் யூஸுப் தெரிவித்தார்.
ரஷ்யாவின் எஸ்யூ 34 யுத்த விமானம் கெமீமெம் விமானத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக எதிர்த்தரப்பு விமானக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தொடக்கம் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கமும், ஈரானைப் பின்னணியாகக் கொண்டு இயங்கிவரும் பயங்கரவாதக் குழுக்களும் இட்லிப்பின் பொதுமக்கள் குடியிருப்புப் பிரதேசங்கள் மீது பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்திவருகின்றன.
மாலை நேரங்களில் பஷர் அல்-அசாத்தின் அரசாங்க வான் படையினர் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இட்லிப்பில் அரச படையினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 116 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 342 இற்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந் துள்ளனர்.
-Vidivelli