இலங்கையில் ஒன்றாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சமூகங்களை இப்போது சிறிய சிறிய கோடுகளைக் கொண்டு பிரிப்பதற்கு சில தரப்பினர் வேண்டுமென்றே முனைகின்றார்கள். இரு சமூகத்தவர்களுக்கு மத்தியிலும் வேற்றுமை ஏற்பட வேண்டும் என ஒரு தரப்பினர் இரு சமூகத்தினையும் சூடாக்கும் வேலைகளை மிகக் கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
ஆசுகவி அன்புடீனின் 50 வருட இலக்கியப் பணியினைப் பாராட்டி கௌரவிக்கும் இலக்கியப் பொன் விழாவும், ‘சிற்பம் செதுக்கிய சிற்பி’ சிறப்பு மலர் வெளியீடும் நேற்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொன் விழா மன்றத் தலைவர் எம்.ஸிறாஜ் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட பல்துறை முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா குறிப்பிடுகையில், இன்று சில விடயங்களுக்காக தமிழர்களையும் முஸ்லிம்களையும் சூடாக்குவதற்கான பேச்சுக்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கருத்து மோதல்களாக இடம்பெறுகின்றன.
தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம். இவ்விரு சமூகத்தவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளால் மோதிக் கொள்ள வேண்டும் என ஒருசிலர் முனைப்புடன் செயற்படுகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். தமிழ், முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் எவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்ந்ததோ அதுபோல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் இரு சமூகத்தவர்களும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்.
எமக்கு வேண்டும் என்று ஓர் அரசியல் தரப்பும், இல்லை அது எமக்குத்தான் வேண்டும் என்று மற்றுமொரு தரப்பும் கருத்து முரண்பாடுகளால் இரு சமூகத்தினையும் சேர்ந்த அரசியல்வாதிகள் மோதிக்கொள்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில்தான் சமூகத்திற்காக செயற்பட வந்த அரசியல்வாதிகள் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது.
கருத்து முரண்பாடுகளால் பிரிந்த நம்மில் சிலர் இன்று தமிழால் ஒரே மேடையில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். தமிழுக்கு உரமூட்டியவர்களில் முஸ்லிம்கள் முக்கியமானவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்தத் தமிழ் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சமூகமும் ஒன்றுமைப்பட்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட இதய சுத்தியோடு அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.
எழுத்தாளர்களும், கவிஞர்களும் நமது சமூகங்களை ஒற்றுமைப் படுத்தவும், ஒன்று திரட்டவும் எழுத வேண்டும். அன்பு என்ற விடயம் எல்லோர் மத்தியிலும் காணப்படுமாயின் அந்த அன்பின் மூலம் நாம் அனைவரும் வேறுபாடுகள் மறந்து ஒன்றுபடுவோம் என்பது மட்டும் உண்மையாகும். தனது புனைப்பெயரினை அன்புடீன் என்று சூடிக்கொண்ட அன்புடீன் மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் விடுதலைக் காலம் முதல் நமது சமூகத்திற்காகவும் சமூக விடுதலைக்காகவும் கவிதைகள் பாடிய முக்கிய கவிஞர். இவரது அன்பின் மூலம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு இலக்கியப் பொன்விழா நடத்துவதையிட்டு நாம் அனைவரும் பெருமை கொள்கின்றோம் என்றார்.
-Vidivelli