புதிய பயங்கரவாத தடைச்சட்ட யோசனையை ஏற்க முடியாது
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்கிறது ம.வி.மு.
இனங்களுக்கிடையில் தற்போது பிளவுகளை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்பு சட்ட மூலம் கொண்டு வருவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் புதிய யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத தடைச்சட்ட மூலத்தை தோற்டிக்க மக்கள் விடுதலை முன்னணியினர், பொதுஜன பெரமுனவினருடன் கைகோர்த்துள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளோம். இவ்விடயத்தில் அரசியல் விடயங்களை மையப்படுத்தி தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது. இன்றும் பயங்கரவாத தடைச்சட்டம் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு ஏற்பாடாகவே காணப்படுகின்றது.
ஆகவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு வழங்குவோம். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் தொழில் துறையினரது உரிமைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மக்கள் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான வழிமுறைகள் இதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆகவே தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பாரதூரமானது. இந்த சட்டமூலத்திற்கு எதிராக செயற்படுவோம் என்றார்.
-Vidivelli