சிலாவத்துறை காணி மீட்பு விவகாரம்: ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முடிவு
15 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது, அமைச்சர் ரிஷாத் வடக்கு ஆளுநருடனும் பேச்சு
சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இதன்போது, வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.
முசலி பிரதேச செயலாளர் வசந்தகுமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில் முசலி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், முசலி பிரதேச சபை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், சிலாவத்துறை மண் மீட்பு போராட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக, சிலாவத்துறை கடற்படை முன்பாக கடந்த 15 நாட்களாக மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடும் முசலி பிரதேச மக்களை சந்தித்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் விடயங்களை கேட்டறிந்துகொண்டார். அதன் பின் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தின் போது, மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைத்தனர்.
“பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த, எமக்கு சொந்தமான காணிகளை நாங்கள் பறிகொடுத்து பரிதவிக்கின்றோம். 10 வருடமாக நாங்கள் இந்தக் காணி விடுவிப்புக்காகப் போராடி வருகின்றபோதும் இதுவரை எமக்கு நீதியோ, நியாயமோ கிடைக்கவில்லை. எனவேதான் தற்போது கடற்படை முகாமுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதுதொடர்பில் அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் பல வழிகளிலும் குரல்கொடுத்ததை நாம் அறிவோம். பிரதமருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அமைச்சர் தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது காணியை மீட்டுத்தர வேண்டும்.” இவ்வாறு மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீளாய்வுக்கூட்டத்தின் போது உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.
இக்கோரிக்கைகளை கருத்திற்கு எடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இது தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள், காணித்திணைக்கள அதிகாரிகள் ஆகியோரிடம் அவசரமாக சில தகவல்களை கோரினார்.
“மொத்தமாக 34 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் 06 ஏக்கர் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. 02 ஏக்கர் காணி பாதைகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் எஞ்சிருப்பது 26 ஏக்கர் ஆகும். இந்த 26 ஏக்கரில் 35 பேருக்கு AP (வருடாந்த பெர்மிட்), 18 பேருக்கு LDO (காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழானது), 04 பேருக்கு கிராண்டும் (நன்கொடை அல்லது அளிப்பு) , 13 பேருக்கு உறுதியும் இருக்கின்றன. 12 பேர் காணிகளை அடாத்தாக தமக்கு சொந்தமாக்கி உபயோகப்படுத்தினர். ஏற்கனவே பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கடற்படையினருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டு அவர்கள் அங்கு இடமாறி செல்வதற்கான உறுதிமொழிகளும் தரப்பட்டன இவை தீர்மானமாகவும் உள்ளன.” என பிரதேச செயலாளர் அங்கு தெரிவித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் காணி அதிகாரியிடம் கேள்வியெழுப்பிய அமைச்சர், கடற்படையினருக்கு இந்தப் பிரதேசத்தில் எங்கே காணிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன? அல்லது வேறு ஏதாவது பொருத்தமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா? என கேட்ட போது, மேத்தன்வெளியில் காணி ஒதுக்கப்பட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
சிலாவத்துறை மக்களின் காணிப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஜானாதிபதியின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை நேரடியாக எழுத்துமூலம் கோரிக்கை விடுப்பதென மீளாய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக ஜனாதிபதிக்கு இந்தக் கோரிக்கையை விடுப்பதெனவும் அதன் பிரதிகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைப்பதெனவும் அங்கு முடிவு செய்யப்பட்டது.
மீளாய்வுக்கூட்டத்தின் போது, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், இந்த உக்கிர பிரச்சினையை எடுத்துரைத்தார். ஆளுநருடன் இன்னும் சில தினங்களில் சந்திப்பொன்று தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இந்த மீளாய்வுக்கூட்டத்தில் இது தொடர்பான முழு ஆவணங்களையும் தனக்கு அவசரமாக தருமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்ததோடு, தான் உரியவர்களுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்துவதாக உறுதியளித்தார்.
-Vidivelli