- எம்.எஸ்.குவால்தீன்
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச்சம்பவம் மறைக்கவோ, மறக்கவோ முடியாத இனங்களுக்கிடையே நல்லுறவிற்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்திய மாறாத வடுவாகவும் வரலாற்றில் பதிந்த ஒரு துயரச் சம்பவமாகவும் இடம்பெற்று இன்றுடன் (05/03/19) ஓராண்டு நிறைவடைகிறது.
திகன வன்முறைச் சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக நாடுகளே அறிந்து கொண்ட கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய ஒரு சம்பவமாகும்.
இந்த வன்முறைச் சம்பவத்தின்போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் கண்டி மாவட்டத்தில் 527 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் 2635 பேர் நிர்க்கதிக்குள்ளாகினர். இருவர் காயங்களுக்குள்ளாகி 30 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. 259 வீடுகள் பகுதியளவில் சேதத்திற்குள்ளாகின. ஒரு பள்ளிவாசல் முற்றாக சேதமடைந்ததுடன் 16 பள்ளிவாசல்கள் பகுதியளவில் சேதமடைந்திருந்தன. 37 வர்த்தக நிலையங்கள் (கடைகள்) முற்றாக சேதமடைந்தன. 180 கடைகள் பகுதியளவில் சேதத்திற்குள்ளாகியிருந்தன. 41 வாகனங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்ததுடன் 41 வாகனங்கள் பாதியளவிலும் சேதமடைந்திருந்தன.
முஸ்லிம்களுக்கெதிரான இந்த வன்முறை இடம்பெறுவதற்கு முன்னர் பெப்ரவரி மாதம் (2018) 22 ஆம் திகதி இரவு தெல்தெனிய நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக நான்கு முஸ்லிம் இளைஞர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் லொறி மோதிய சம்பவம் தொடர்பாக லொறி சாரதியுடன் வாக்குவாதப்பட்டுள்ளனர்.
இவ்வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு சாரதி காயத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனால் லொறியின் சாரதி தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி லொறியின் சாரதி கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
தெல்தெனிய அம்பாளை (Ambala) கிராமத்தைச் சேர்ந்த எச். குமாரசிறி (வயது 48) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த தெல்தெனிய பொலிசார் திகன – கெங்கல்ல – அம்பகஹவத்த பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு (முச்சக்கரவண்டி சாரதிகள்) முஸ்லிம் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தெல்தெனிய நீதிமன்றத்தில் நீதிவான் எச்.எம். பரீக்டீன் முன்னிலையில் ஆஜர் செய்தபோது நீதிவான் இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் லொறி சாரதியின் மரணத்திற்கு முஸ்லிம் இளைஞர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டு திகன பிரதேச முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட போவதாக வதந்திகள் பரவியதாக தெரிவிக்கப்பட்டு முஸ்லிம்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில் 04 ஆம் திகதி இரவு மெதமஹாநுவர, அம்பாளை சந்தியில் அமைந்திருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான எரிவாயு (கேஸ்) விற்பனை செய்யும் பாரிய வர்த்தக நிலையம் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து பொலிசார் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் 24 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதன் பின்னர் இறந்த லொறிச்சாரதியின் பிரேத அடக்கம் 05 ஆம் திகதி (மார்ச் 2018) நடைபெற்றது.
இச்சாரதியின் பிரேத பெட்டியை சுமந்து கொண்டு முஸ்லிம்களுக்கு கண்டனம் தெரிவித்து அம்பாளையிலிருந்து கெங்கல்ல வரை சுமார் 22 கிலோமீட்டர் தூரம் பெருமளவு மக்கள் வரப்போவதாக வதந்திகள் பரவின.
இதனால் தெல்தெனிய பொலிசார் இவ்ஊர்வலத்தை தடுக்கும் நோக்கில் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். நீதிவான் இப்பிரேதத்தை இறந்த லொறிச் சாரதியின் வசிப்பிடமான அம்பாளை மயானத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும், அதனை எடுத்துக்கொண்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என உத்தரவினை பிறப்பித்திருந்தார்.
என்றாலும் இக்கட்டளையை மீறி ஊர்வலம் ஒன்று இடம்பெறப் போவதாக 05 ஆம் திகதி காலையில் திகன பிரதேசங்களில் காட்டுத்தீ போல் வதந்திகள் பரவின.
இதனையடுத்து முஸ்லிம்கள் அச்சம் கொண்டு பரபரப்படைந்ததுடன் பதற்றத்துடன் பலர் வயோதிபர்களையும் சிறுவர்களையும் நோயாளர்களையும் அழைத்துக் கொண்டு வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் உடைமைகளையும் கைவிட்டு உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பிற பகுதிகளில் அமைந்துள்ள தங்கள் உறவுகளின் வீடுகளையும் உதவிகளையும் நாடி விரைந்தனர்.
ஆனாலும் அன்றைய (05/03/2018) தினம் காலைப்பொழுது கடந்து சற்று நேரத்தில் திகனையிலிருந்து இளைஞர் கோஷ்டிகள் திரண்டு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் போன்ற உடைமைகளைத் தாக்கியும் தீ வைத்து எரித்தும் சேதப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை மேற்கொண்டனர்.
இதனால் திகன – பள்ளக்கால் – கெங்கல்ல – பலகொல்ல எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களின் வீடுகள் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு அவைகள் எரிமலைகள் போன்று தீ சுவாலைகளுடன் எரிவதைக் காணமுடிந்தது.
இதன்போதே பள்ளக்கால் (திகன) மஸ்ஜிதுல் லாபீர் பள்ளிவாசலினுள் பாதணிகளுடன் புகுந்த வன்முறையாளர்கள் புனித குர்ஆன்களையும் உடைமைகளையும் நடுவீதிக்கு வீசி பள்ளிவாசலையும் உடைமைகளையும் சேதப்படுத்தி எரித்தனர்.
இதன்போது அங்கு அவ்வீதியில் அமர்ந்திருந்த பல வீடுகளுக்கு தீ வைத்தபோதே எரியும் வீட்டில் சிக்கிய சம்சுதீன் அப்துல் பாசித் (24 வயது) என்ற இளைஞன் எரியும் வீட்டிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில் முச்சுத் திணறி உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வன்முறைச் சம்பவம் உடனடியாக தடுக்கப்படாத நிலையில் ஹரிஸ்பத்துவ– பூஜாபிட்டிய- மெததும்பர– குண்டசாலை– பாத்ததும்பர குண்டசாலை– கங்கவட்ட கோறளை- அக்குறணை– யட்டி நுவர – கண்டி போன்ற பிரதேசங்களுக்கும் பரவியது.
இதனால் 17 பள்ளிவாசல்கள், 289 வீடுகளும், 217 வர்த்தக நிலையங்களும், 13 கார்கள், 24 முச்சக்கர வண்டிகள், 28 மோட்டார் சைக்கிள்கள், 5 லொறிகள், 7 வேன்கள், 2 பஸ் வண்டிகள், 3 மிதி வண்டிகள் என்பன எரித்து சேதமாக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான அறிக்கைகளை திகன வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண இணைப்புச் சபையின் அலுவலகம் தயாரித்துள்ளதாக இதன் அலுவலக செயலாளர் மௌலவி அப்துல் கப்பார் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க இவ்வன்முறை இடம்பெற்று வந்த தினங்களில் 7 ஆம் திகதி (07.03.18) கண்டி ஹீரஸ்ஸகலயைச் சேர்ந்த மௌலவி சதகதுல்லா (முன்னாள் சமய ஆசிரியர்– அகில இலங்கை சமாதான நீதவான்– முஸ்லிம் விவாக பதிவாளர்– காதிநீதிவான்) இவர் அக்குறணை பிரதேசத்துக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ் வண்டியில் அம்பதென்ன என்ற இடத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையில் கண்டியில் இறங்கி கண்டி லயின் பள்ளி (பெரிய பள்ளிவாசல்) வாசல் அருகில் நிறுத்தப்பட்டிருந்த தன் மோட்டார் சைக்கிளில் ஏறி ஹீரஸ்ஸகலயில் உள்ள தம் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இவரை இந்நிலையில் கண்ட குடும்பத்தினர் உடனடியாக கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இவரது தலையில் விசேட சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பூரண குணமடையாத நிலையில் வீட்டிற்கு மாற்றப்பட்டார். பேச முடியாமலும் கோமா நிலையிலும் இருந்த இவரை குணப்படுத்த குடும்பத்தினர் வீட்டிற்கு விசேட வைத்தியர்களை அழைத்து பெரும் பணச்செலவில் மருந்து வகைகளைப் பெற்றுக்கொடுத்தும் சிகிச்சைப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும் இவை பயனளிக்காத நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.12.2018) உயிரிழந்தார். 27 ஆம் திகதி காலை இவரது ஜனாஸா கண்டி கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை இந்த வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை, வீடுகள் உடைமைகள் என்பவற்றை பிரதமர், அமைச்சர்கள் என பலதரப்பட்டவர்களும் சென்று பார்வையிட்டனர்.
இம்மக்களுக்கு நிவாரண வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசு சிறு சிறு உதவிகளை வழங்கியபோதும் உரிய நஷ்டஈடுகள் உரிய வகையில் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தெரிவித்தனர்.
என்றாலும் கண்டி ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் பரோபகாரிகளின் உதவிகளால் பெரும்பாலானோர் வீடுகளை, கடைகளை புனர்நிர்மாணம் செய்துகொண்டுள்ளனர்.
கடும் சேதத்திற்குள்ளான பள்ளக்கால் (திகன) மஸ்ஜிதுல் லாபீர் பள்ளிவாசலை புனரமைப்புச் செய்ய பள்ளிவாசலின் நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அதற்கு பல்வேறு இடையூறுகளும் தடைகளும் ஏற்பட்டுவந்த போதும் கடந்த 9 மாதங்களின் பின்னர் கடும் பிரயத்தனத்தின் மூலம் அதனை புனரமைப்புச் செய்ய அனுமதி கிட்டியுள்ளதாக
இச்சம்பவங்களில் லொறி சாரதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதியும் வன்முறைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் மகாசோன் பலகாய தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க, கும்புரேகம சோபித்த தேரர், உட்பட 3 நபர்களுக்கு எதிராக உள்ள வழக்கு ஜுலை மாதம் 08 ஆம் திகதி கண்டி மேல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உள்ளது. இது போன்ற இனங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எந்த ஒரு இனத்துக்கும் ஏற்படக்கூடாது. முஸ்லிம் மக்கள் இன்று விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
-Vidivelli