மக்கள் விடுதலை முன்னணி, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்துக்கு தற்போது ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்ற முறைமையை உருவாக்குவதற்கே 20 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப் படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் இந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு அக்கட்சி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர் மனோ கணேசன் ஆகியோருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டிருந்தார். அவரை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதவாறு 19 ஆவது திருத்தம் தடுக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமல் செய்துவிட்டால் நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய பிரதமர் பதவிக்கு வந்து ஆட்சியில் அமரலாம் என்பது அவரது திட்டமாக இருக்கலாம்.
இதேவேளை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் சரியான தருணம் இதுவல்ல. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே இது முன்னெடுக்கப்பட வுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார். தனது கட்சி இதற்கு ஆதரவளிக்கமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமல் செய்வது சிறுபான்மைச் சமூகத்துக்கு பாதிப்பாக அமையும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவுக்கு அக்கட்சி வழங்கிய இடைக்கால அறிக்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமற் செய்வதை ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அவசியமாகும். ஜனாதிபதி ஆட்சிமுறையே எமக்கு பாதுகாப்பானதாக அமையும்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் 20 ஆவது திருத்தத்தை எதிர்த்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இதற்கு ஆதரவு வழங்கினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தும் கூட்டு எதிரணியிலிருந்தும் விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
20 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுப்பெற்றுவரும் நிலையில் இத்திருத்தத்தை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக அமையும். எனவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli