இன்று பேசப்படும் இன நல்லிணக்கம் அன்று பொலன்னறுவை யுகத்தில் சிறப்பாக இருந்தது
கண்டியில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
இலங்கையில் இன்று பேசப்படுகின்ற சகவாழ்வு, இன நல்லிணக்கம் போன்ற அம்சங்கள் அன்று பொலன்னறுவை யுகத்தில் மிகச் சிறப்பாகக் காணப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கண்டி பேராதனை ஸ்ரீ சுபோதாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்துவைத்தபின் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது- இந்த இடத்திற்கு நான் மூன்று முறை விஜயம் செய்துள்ளேன்.
ஒவ்வொரு முறை யும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இங்கு கண்டேன். இங்கு அமைக்கப்பட்டுள்ள தர்மராஜ ஸ்தூபியில் வைக்கப்பட்டுள்ள பௌத்த புனித சின்னங்கள் தொடர்பான பட்டியல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை வாசிக்கும்போது இந்த இடத்தின் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது. இதற்கு வரலாற்று முக்கியத்துவமுண்டு. இதனூடாக பௌத்த கலாசாரம், பௌத்த நாகரிகம் பற்றி அறிந்துகொள்ளவும் பேசவும் இயலுமாக உள்ளது.
பௌத்த கோட்பாட்டில் தேரவாத சித்தாந்தம் நிறைந்த ஒரு பிரிவாக நாம் இருக்கிறோம். எமது பின்னணியைப் பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் தேரவாத தலைமையகமாக இலங்கை கருதப்படுமளவு சிறப்பானதாக உள்ளது.
தற்போது மியன்மார் என்றழைக்கப்படும் பர்மாவிற்கு நான் பல முறை விஜயம் செய்துள்ளேன்.
அப்போது அங்கு பௌத்த கலாசாரப் பின்னணிகளை அவதானித்துள்ளேன். இருப்பினும் அங்கு இலங்கை பௌத்த துறவிகளுக்கான விகாரைகள் அல்லது மடாலயங்கள் இல்லை. ஆனால் இலங்கையில் பல இடங்களிலும் பர்மாவின் பௌத்த துறவிகளுக்கான மடாலயங்கள் உள்ளதை காண்கிறோம்.
எனவே, நான் பர்மா அரசுடன் இதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி அங்கும் இலங்கை பிக்குமார்களுக்கான மடாலயங்கள் அமைப்பது பற்றிப் பேசவுள்ளேன்.
சிலமாதங்களுக்கு முன் பொலன்னறுவைப் பிரதேசத்தில் ஒரு சிவன் கோவிலை புனரமைப்புச் செய்ய அகழ்வுப்பணியில் ஈடுபட்டபோது பூமியில் பழைய விகாரையொன்றின் சிதைவுகள் கிடைத்துள்ளன. இது எப்படி வந்தது என்ற சிந்தனை ஏற்பட்டது.
இதுபற்றி நான் புதைபொருள் மற்றும் புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருள் விற்பன்னர்களுடன் கலந்தாலோசித்தேன்.
ஆரம்பத்தில் அனுராதபுரயுகத்தில் கட்டப்பட்ட விகாரை பின்னர் சிதைவடைந்துள்ளது.
அதே நேரம் பொலன்னறுவை யுகம் ஆரம்பித்தபோது அவ்விடத்தில் சுமார் 600 வருடங்களின் பின் சிவன் கோவிலொன்று கட்டப்பட்டிருக்கலாமென அபிப்பிராயப்பட்டனர்.
இன்று நாம் பேசும் அனைத்து இனநல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் அனைத்தும் அன்றைய பொலன்னறுவை யுகத்தில் சரியாக இருந்தது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
பௌத்த கலாசாரப் பாரம்பரியங்களுடன் பல விடயங்களை நாம் தொடர்புபடுத்த முடியும். எனவே எதிர்காலத்தில் தர்மத்தையும் தார்மீகத்தையும் உலகளாவிய ரீதியில் எடுத்துச் செல்வோம் என்றார்.