நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம, பேருவளை, கிந்தோட்டை, அம்பாறை, திகன, கண்டி உட்பட பல சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கும், பள்ளிவாசல் களுக்கும் நஷ்ட ஈடுகள் வழங்கப்படுவதில் நீண்டகால தாமதத்தையே எமது மக்கள் எதிர்கொண்டனர். சில இடங்களில் உரிய நஷ்ட ஈடுகள் கூட வழங்கப்படவில்லை.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திகன, கண்டியில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு பகுதியளவில் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டுவிட்டன. முழுமையான நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது பூர்த்தி செய்யப் பட்டுள்ளன.
ஆனால் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி இனவாதிகளால் தாக்கி சிதைக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் 13 சொத்துகளுக்கு இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை. இவற்றுக்கான நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் அவர்களை வலியுறுத்த விரும்புகிறோம்.
பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையே நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டுமே தவிர அமைச்சர்கள் தன்னிச்சையாக அத்தொகையில் எத்தகைய மாற்றங்களையும் செய்யக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
வன்செயல்களால் பாதிக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலின் இழப்புகளுக்கான நஷ்டஈடு 4½ கோடி ரூபாவென அப்போதிருந்த பள்ளிவாசல் நிர்வாகம் அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில் அரச அதிகாரிகளும், மதிப்பீட்டு திணைக்களமும் மேற்கொண்ட ஆய்வுகளையடுத்து அம்பாறை பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் ரூபா என நிர்ணயிக்கப்பட்டு அதற்கான கோவைகள் புனர்வாழ்வு அதிகாரசபைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அம்பாறை பள்ளிவாசலுக்கு 27 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்க முடியாது என அமைச்சரவை நிராகரித்துள்ளது.
புனர்வாழ்வு அதிகார சபையின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக மதஸ்தலம் ஒன்றுக்கான ஆகக்கூடிய நஷ்ட ஈடாக 1 மில்லியன் ரூபாவே வழங்க முடியும் என்பதற்கு அமைவாகவே அத்தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அம்பாறை பள்ளிவாசலுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நஷ்டஈட்டுத் தொகையாக 27 மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகமும், சிவில் சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அம்பாறை பள்ளிவாசல் விவகாரத்தில் துரிதமாக செயற்பட வேண்டும். அரச அதிகாரிகள், அரச நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ள 27 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையுமாகும்.
இதேபோன்று அம்பாறையில் பாதிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கும் மதிப்பீடு செய்யப்பட்ட நஷ்டஈட்டினை விடவும் குறைவாகவே இழப்பீடு வழங்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை வன்செயல்களின் போது மோசமாகப் பாதிக்கப்பட்ட காசிம் ஹோட்டலின் சேதங்கள் 22 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டாலும் 2 இலட்சம் ரூபாவே நஷ்டஈடாக வழங்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே உறுதியளித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தற்போது புனர்வாழ்வு அதிகார சபைக்கும் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். எனவே பிரதமர் பள்ளிவாசல் உட்பட வன்செயலில் பாதிக்கப்பட்ட அனைத்து சொத்துகளுக்கும் உரிய நஷ்ட ஈட்டினை தாமதமின்றி பெற்றுக்கொடுக்க வேண்டுமென நாமும் கோருகிறோம்.
-Vidivelli