2018 ஆம் ஆண்டு சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் அமைந்துள்ள டௌமா மாவட்டத்தில் குளோரின் இரசாயனத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டமைக்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நச்சு இரசாயனங்களை ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பின் உண்மைகளைக் கண்டறியும் குழு தனது விசாரணைகளின் இறுதி அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளது.
குற்றச்சாட்டு தொடர்பில் உண்மைகளைக் கண்டறியும் குழுவின் செயற்பாடுகள் சம்பவ இடங்களுக்கு விஜயம் செய்து சுற்றாடல் மாதிரிகளைச் சேகரித்தல், சாட்சிகளிடம் நேர்காணல்களை மேற்கொள்ளுதல் மற்றும் தரவுகளைச் சேகரித்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருந்ததென இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், சுற்றாடல் மற்றும் உயிரியல் மருத்துவ மாதிரிகளின் பகுப்பாய்வு பெறுபேறுகள் மற்றும் நச்சுத் தன்மையியல் மற்றும் காற்றுப் பரவல் பகுப்பாய்வுகள் மற்றும் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட மேலதிக டிஜிட்டல் தகவல்கள் உள்ளிட்ட பல உள்ளீடுகளும் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டௌமா இரசாயனத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டமை சம்பந்தமான குற்றச்சாட்டு தொடர்பில் சேகரிக்கப்பட்ட மேற்குறித்த அனைத்துத் தகவல்களையும் மதிப்பீடு செய்து பகுப்பாய்வு செய்ததில் 2018 ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நச்சு இரசாயனம் பயன்படுத்தப்பட்டமைக்கான நியாயபூர்வமான ஆதாரங்களை உண்மைகளைக் கண்டறியும் குழு சமர்ப்பித்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளைக்கொண்ட குளோரினையொத்த மீள்தாக்க குளோரின் கொண்ட நச்சு இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளமையினை குறித்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வறிக்கை இரசாயன ஆயுதங்கள் தொடர்பான பிரகடனத்தின் தரப்பு நாடுகளுக்கு பகிரப்பட்டுள்ளதோடு, அவ்வறிக்கை தொடர்பில் ஹேக்கில் அமைந்துள்ள இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பின் தலைமையகத்தில் குறிப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளது. இவ்வறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெஸ்ஸின் ஊடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
டௌமாவில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் உண்மைகளைக் கண்டறியும் குழு தனது இடைக்கால அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தது.
-Vidivelli.lk