புலனாய்வுத் துறை மூலம் முஸ்லிம்கள் நாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளனர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
புலனாய்வுத்துறையில் முஸ்லிம்கள் அதிகளவில் இணைந்து நாட்டுக்காகப் பாரியளவில் பங்காற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் உடுநுவர எலமல்தெனியவில் “எலிய” அமைப்பினால் தொழிலதிபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்
கண்டி மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, அநுராத ஜயரட்ன, ஆனந்த அளுத்கமகே, திலும் அமுனுகம மற்றும் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர்,
நாட்டில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தமது வாக்குகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றமையாகும்.
சிங்கள, தமிழ் , முஸ்லிம் மக்கள் யாவரும் பொதுவான பிரச்சினைகளுக்குட்பட்டுள்ளனர். இது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வறுமை, வீடு, தொழில் முதலானவை சார்ந்த பிரச்சினைகளாகும். இவை தீர்க்கப்பட வேண்டும்.
இப்பிரச்சினைகள் சகல சமூகங்களுக்கும் பொதுவான பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளுக்கு காரணம் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தான் என்று தமிழ் அரசியல்வாதிகளும், தமிழர்களும் முஸ்லிம்களும் தான் காரணம் என்று சிங்கள அரசியல்வாதிகளும், சிங்களவர்களும் தமிழர்களும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது மக்களிடம் கூறிவருகின்றனர். இந்த அரசியல் போக்கு சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசியல்மயப்படுத்தியுள்ளது.
இந்நாட்டு மக்களின் பிரச்சினைகள் எதுவித அரசியல் பேதமுமமின்றி தீர்க்கப்பட வேண்டும். இதில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளுள் வறுமை ஒழிப்பு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதற்காக சரியான பொருளாதாரக் கொள்கையின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது சகல இனத்தவர்களும் கெளரவமாக வாழும் நிலை உருவாகும்.
இந்நாட்டில் எதிர்காலத்தில் சகல இனத்தவர்களும் அச்சம், பீதியின்றி கௌரவமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதாள குழுக்கள் கப்பம் பெறும் நிலையை இல்லாமலாக்குவோம்.
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில், முப்பது வருட கொடிய பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்பயங்கரவாதத்தால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மகிந்த ராஜபக் ஷ ஆட்சியில் பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை மக்கள் ஆணைக்கு மாற்றமான செயலல்ல.
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமையால் அரசியல்வாதிகளாலும் எதிரிகளாலும் நாம் இனவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டோம். நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களாக காட்டப்பட்டோம். மகிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவருக்கும் நன்மைகளை ஏற்படுத்தியது.
கொழும்பில் சேரிகளில் மக்கள் எதுவித வசதிகளற்ற நிலையில் சுகாதாரப் பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். நாம் கொழும்பில் மாடிவீட்டுத் திட்டங்களை உருவாக்கி சேரிப்புற மக்களை குடியமர்த்தினோம். மக்கள், தோட்டங்களில் அல்லது சேரிகளில் வாழ்ந்த விகிதாசாரத்திற்கேற்ப மாடிவீட்டுத் திட்டங்களில் குடியேற்றப்பட்டனர்.
இவ்விகிதாசாரத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யவில்லை. இக்குடியேற்றத்தில் இன, மத பேதங்கள் பார்க்கப்படவில்லை. ஆனால், சில அரசியல்வாதிகள் சிங்கள மக்களை குடியேற்றி விட்டு தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற முற்படுவதாக பிரசாரம் செய்தனர். இதனை மக்களில் ஒரு சாரார் நம்பினர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் எனக்கெதிரான நிலைப்பாடுகள் ஏற்பட்டன. ஆனால், இதன் உண்மைத்தன்மையை இன்று மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
நாட்டில் நீதி, நியாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நாம் எதிர்காலத்தில் நீதி நியாயத்தை உறுதிப்படுத்துவோம். சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் யாவரும் கௌரவமாக வாழ்வதை விரும்புகின்றனர். இதனை உறுதிப்படுத்துவது எமது கடமையாகும்.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை நிலை நாட்டியமையால் முஸ்லிம் சமூகம் சுதந்திரமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை உருவாகியது. எம்மிடம் வெள்ளை வேன் இல்லை. இந்நாட்டில் வெள்ளை வேன்கள் 1988, 89, 90களில் இருந்தன. நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொழும்பில் பலமிக்க கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். இதனால் கொழும்பில் பொருளாதார மையங்களில் குண்டுகள் வெடித்தன. அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர். அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை அழித்தொழிப்பதில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பெரும் பங்களிப்பு செய்தனர். முஸ்லிம் சமூகம் தேசிய பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்துள்ளது. பாதுகாப்புத்துறையில் புலனாய்வுப் பிரிவில் அதிகளவு முஸ்லிம்கள் இருந்தனர். இப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் நாட்டுக்காகப் பணியாற்றினர்.
-Vidivelli