பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினம், அலரி மாளிகையிலிருந்து வெளியேறிச்சென்ற நான்கு வாகனங்கள் தொடர்பில் சி.ஐ.டி. தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன் தாஜுதீன் கொலை சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக கொலை இடம்பெற்ற தினம், குறிப்பிட்ட நேரத்தில் நாசாவின் செயற்கைக் கோளினால் பிடிக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை தமக்குப் பெற்றுத்தருமாறு சி.ஐ.டி. கோரிய நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடத்தில் எந்தவொரு செய்மதியும் செயற்படவில்லை என்பதால் அவ்வாறான எந்தப் படங்களும் இல்லை என நாஸா அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படுகொலை குறித்த விசாரணைகளில் தற்போது நம்பிக்கையூட்டும் தகவலொன்று கிடைத்துள்ளதாக விசாரணையாளர்களான சி.ஐ.டி.யுடன் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்னாயக்க மன்றுக்கு அறிவித்தார்.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவின் சிரிலிய சவிய எனும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் வண்டியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக சி.ஐ.டி.க்கு கிடைத்துள்ள மிக நம்பகரமான தகவலை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
டப்ளியூ.பி. கே.ஏ. 0642 எனும் குறித்த டிபெண்டர் வண்டியில், உயிரியல் கூறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டது. அதனை சோதனை செய்துள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள், கொலை இடம்பெற்று பல வருடங்கள் கடந்த போதும், குறித்த டிபெண்டரில் ஆய்வுகளை முன்னெடுக்க முடியுமான நிலைமையில் உயிரியல் கூறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அந்த உயிரியல் கூறுகள் வசீம் தாஜுதீனுடையதா என்பது உள்ளிட்ட மேலதிக பரிசோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை வஸீம் தாஜுதீனினுடையது என உறுதி செய்யப்படுமாக இருந்தால் இவ்வழக்கில் அது மிகப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும் அதனால் அந்தப் பரிசோதனைகள் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க, கொழும்பு மேலதிக நீதிவான் இசுரு நெத்திகுமாரவுக்கு அறிவித்தார்.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று பிற்பகல் கொழும்பு மேலதிக நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது இந்த விவகாரத்தில் சாட்சிகளை மறைத்தமை, மாற்றியமை மற்றும் கொலைச்சதியில் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பிணையிலுள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி அங்கொடகே சுமித் சம்பிக்க, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். முதலிரு சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், மூன்றாம் சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ ஆஜரானார்.
சட்டமா அதிபர் சார்பில் வழமையாக மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க நேற்று மன்றில் ஆஜரானார். சி.ஐ.டி. சார்பில் விசாரணை அதிகாரிகளான மனிதப் படுகொலை குறித்த விசாரணை அறையின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டி, அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க மற்றும் சார்ஜன்ட் ரத்னப்பிரிய ஆகியோர் மேலதிக விசாரணை அறிக்கையுடன் மன்றில் ஆஜராகினர்.
இந்நிலையில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்த சி.ஐ.டி.யின் மேலதிக விசாரணை அறிக்கையை மையப்படுத்தி, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க மன்றில் விடயங்களை முன்வைத்தார்.
“கொலை செய்யப்பட்ட வஸீம் தாஜுதீனுக்கு சொந்தமான மடிக்கணினி ஒன்றினை நாம் சோதனை செய்தபோதும் அதில் சந்தேகத்துக்கிடமான எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதே போல் வஸீம் தாஜுதீன் படுகொலையில் குற்றவாளிகளைக் கைது செய்ய சி.ஐ.டி. அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் எனப்படும் நாசாவின் உதவியை நாடியிருந்தோம். தாஜுதீன் கொலை சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக கொலை இடம்பெற்ற தினம், குறிப்பிட்ட நேரத்தில் நாசாவின் செயற்கைக் கோளினால் பிடிக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை தமக்கு பெற்றுத்தருமாறு கோரியிருந்த நிலையில் அந்த அறிக்கை கிடைத்தது. அதிலும் எந்த தகவலும் இல்லை.
வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசியை டிஜிட்டல் பகுப்பாய்வுக்குள்ளாக்கி பெற்றுக்கொண்ட அறிக்கையை மையப்படுத்தி முன்னெடுக்கபப்டும் விரிவான விசாரணைகள் தொடர்கின்றன.
அதே போல் வஸீமின் சகோதரியால் சி.ஐ.டி.க்கு வழங்கப்பட்ட சி.ஐ.ரி.வி. காணொலியை மையப்படுத்திய மேலதிக விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
அதேபோல் இவ்வழக்கில் முக்கிய சான்றுப் பொருளாக கருதப்படும் டப்ளியூ.பி. கே.ஏ. 0642 எனும் குறித்த டிபெண்டர் வண்டியில், உயிரியல் கூறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. அப்போது அதில் இன்னும் பரிசோதனைக்கேற்ற நிலையில் உயிரியல் கூறுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை நம்பிக்கையளிக்கின்றது. அந்த உயிரியல் கூறுகள் வஸீமினுடையதாக இருப்பின் இவ்வழக்கில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படலாம்.
இதேவேளை, வஸீம் கொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய நான்கு வாகனங்கள் தொடர்பில் விசாரணை நடத்துகின்றோம்” என்றார். இதன்போது அறிக்கையில் அலரி மாளிகை என குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானித்த நீதிவான், ஜனாதிபதி மாளிகையெனக் குறிப்பிட்டது அலரி மாளிகையையா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஆம் என்று கூறியதுடன், அப்போதைய ஜனாதிபதி அதிலேயே தங்கியிருந்ததாகக் கூறினார். அங்கிருந்து நான்கு வாகனங்கள் கொலை இடம்பெற்ற தினத்தில் வெளியேறியுள்ளதாகவும், அதில் சென்ற கடற்படை, இராணுவ வீரர்கள் குறித்து விசாரணை இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது நீதிவான் இசுரு நெத்திகுமார, அந்த இராணுவ வீரர்கள் எதற்காக அலரி மாளிகையில் இருந்தனர் என கேட்டார். அதற்கு பிரபு பாதுகாப்பு அதிகாரிகளாக அவர்கள் செயற்பட்டார்கள் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பதிலளித்ததுடன், அந்தப் பிரபு யார் என மீண்டும் நீதிவான் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அவர் மஹிந்த ராஜபக் ஷ எனப் பதிலளித்தார்.
இதனைவிட வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில், அதாவது, 2012.05.16 ஆம் திகதிக்கும் மறுநாள் 17 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட கால நேரத்தில், சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள தொலைபேசி தொடர்பாடல் கோபுரத்திலிருந்து அனைத்து தகவல்களும் பெறப்பட்டு அதிலிருந்து சந்தேக நபரை அடையாளம் காணும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதுள்ள மூன்று சந்தேக நபர்களுக்கும் எதிராக தண்டனை சட்டக் கோவையின் 198, 215 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் தெளிவாக உள்ளன. அது தொடர்பில் மேலதிக விசாரணை தேவைப்படுமானால் குற்றவியல் சட்டத்தின் 115 ஆம் பிரிவின் கீழ் அனுமதி வழங்கலாம்.
எனினும், இவர்களுக்கு எதிராக சாட்சிகள் இல்லை. குற்றவியல் சட்டத்தின் 113 அ பிரிவுடன் இணைத்து கூறப்படும் 296 ஆம் பிரிவின் கீழ்வரும் அந்தக் குற்றச்சாட்டு இம்மூன்று சந்தேக நபர்கள் தொடர்பிலும் தொடர்ந்து முன்வைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தெளிவு தேவை. கொலை தொடர்பில் இன்னும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் இவர்களுக்கு எதிராக அக்குற்றச்சாட்டை தொடர்வதா? என நீதிவான் கடந்த தவணையில் எழுப்பிய கேள்வியை ஞாபகப்படுத்தி பதில் கோரினார்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் மூவரையும் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து, சாட்சிகளை அழித்தமை தொடர்பில் தனியாக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு சுட்டிக்காட்டிய நீதிவான், கொலைக் குற்றவாளிகளை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கூறி வழக்கை எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீனின் சடலம் அவரது காருக்குளிருந்து மீட்கப்பட்டது. அப்போது கார் இருந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி.காட்சிகள் அடங்கிய டி.வி.டி.கள் இரண்டு கடந்த 2017 ஜூலை 8 ஆம் திகதி, வஸீம் தாஜுதீனின் மூத்த சகோதரியான பாத்திமா ஆய்ஷா தாஜுதீனினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli