மாவனெல்லையிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட விசாரணைகளில் ஓர் அங்கமாக புத்தளம் – வணாத்தவில்லு பகுதியில் பெருந்தொகை வெடிபொருட்கள் சி.ஐ.டி.யினரால் மீட்கப்பட்டன. இந்த வெடிபொருட்களை வணாத்தவில்லு – லக்டோ தென்னந்தோப்புக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் என்.டப்ளியூ. பி.ஏ. 2855 எனும் வெள்ளை வேனை சி.ஐ.டி.யினர் கைப்பற்றியுள்ளனர். வெடிபொருள் கடத்தலின் பின்னர் குறித்த வேன் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி பிறிதொருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கெக்குனுகொல்ல பகுதியில் வைத்து சி.ஐ.டியினரால் கைப்பற்றப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட விசாரணை அறை உப பொலிஸ் பரிசோதகர் டயஸ் மாவனெல்லை நீதிவான் உபுல் ராஜகருணாவுக்கு நேற்று அறிவித்தார்.
அத்துடன் குறித்த வேனை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் இதன்போது அவர் நீதிவானிடம் அனுமதி பெற்றுக்கொண்டார்.
புத்தர் சிலை உடைப்பு விவகாரம் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க மற்றும் சி.ஐ.டி.யின் உபபொலிஸ் பரிசோதகர் டயஸ் உள்ளிட்ட குழுவினர் விசாரணையாளர்கள் சார்பில் ஆஜராகினர்.
முதலில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி. தடுப்புக் காவலிலுள்ள வணாத்தவில்லுவில் வைத்து கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களான மொஹம்மட் ஹனீபா முபீன், மொஹம்மட் ஹமாஸ், மொஹம்மட் நக்பி, மொஹம்மட் நளீம் ஆகியோர் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. அவர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதால் இவ்வாறு ஆஜர் செய்யப்படவில்லை. எனினும் விளக்கமறியலில் உள்ள பெண் ஒருவர் உள்ளிட்ட 13 சந்தேக நபர்களில் 12 பேர் மட்டுமே மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். ஐந்தாவது சந்தேக நபர், அம்மை நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சிறை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணை அறிக்கையை முதலில் சமர்ப்பித்த மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க, தாம் முன்னெடுக்கும் அனைத்து விசாரணைகளையும் சி.ஐ.டி.யிடம் இன்று முதல் (நேற்று) கையளிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் குற்றவியல் சட்டத்தின் 125 ஆம் அத்தியாயத்தின் கீழ் விசாரணைகளை சம்பூரணமாகப் பொறுப்பேற்ற சி.ஐ.டி. அச்சட்டத்தின் 124 ஆம் அத்தியாயத்தின் கீழ் விசாரணைகளுக்கான உத்தரவுகளையும் பெற்றுக்கொண்டது.
இதன்போது மன்றுக்கு விசாரணைகளை தெளிவுபடுத்திய சி.ஐ.டி., இந்த விவகாரத்தின் பிரதான இரு சந்தேக நபர்களாக கருதப்படும் (சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா) இருவரையும் தேடி விசாரணைகள் தொடர்வதாக சுட்டிக்காட்டியது. அவர்கள் இருப்பிடங்களை விட்டு தலைமறைவாகி, அடிக்கடி ஒவ்வொரு இடங்களுக்கு மாறிக்கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனை மையப்படுத்தி விசாரணைகள் தொடர்வதாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது.
அத்துடன் கைதாகி விளக்கமறியலிலுள்ள சந்தேக நபர்கள் பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அவர்கள் மறைப்பதாக சி.ஐ.டி. குறிப்பிட்டது.
இந்நிலையில் சிறைச்சாலையில் வைத்து முதல் நான்கு சந்தேக நபர்களிடம் மட்டும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டயஸ் நீதிவானுக்கு கூறினார்.
இதன்போது முதல் நான்கு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது சேவை பெறுநர் சி.ஐ.டி.யினரின் விசாரணையின் போது அச்சுறுத்தப்ப்ட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினார். சிறைச்சாலை அதிகாரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் விசாரணை செய்யவே நீதிமன்றம் அனுமதித்ததாகவும் எனினும், தமது சேவை பெறுநர்கள் விசாரணைகளின் போது, சி.ஐ.டி. அதிகாரிகளால் அச்சுறுத்தப்படுள்ளமை நியாயமான விசாரணைகள் தொடர்பில் கேள்வி எழுவதாக அந்த சட்டத்தரணி சுட்டிக்கடடினார்.
பிரதான இரு சந்தேக நபர்களை கடந்த மூன்று மாதங்களாகப் பிடிக்காமல் கைதாகியுள்ள இவர்கள் மேல் முழுப் பழியையும் சுமத்த சி.ஐ.டி. முயற்சிப்பதாக அவர் கூறினார்.
‘பிரதான சந்தேக நபர்களை கைதுசெய்ய சி.ஐ.டி. என்ன விசாரணைகளை நடாத்தியது. அவர்கள் இருப்பிடங்களை மாற்றி மாற்றி வருவதாகக் கூறுகின்றனர். அது தொடர்பில் விசாரித்தார்களா? அவர்கள் செல்லும் வாகனங்களையேனும் கைப்பற்றினரா? எவையும் நடக்கவில்லை’ என அந்த சட்டத்தரணி பிரதான சந்தேக நபர்கள் தொடர்பில் முன்னெடுக்கபப்டும் விசாரணைகளின் மந்தகதி தொடர்பில் அதிருப்தி வெளியிட்டார்.
எவ்வாறாயினும் விசாரணைகளின் போது சந்தேக நபர்களை அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சி.ஐ.டி. மறுத்தது. பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மாவனெல்லை நீதிமன்றின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகாத நிலையில், விசாரணைகளின் போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பின் சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரகாரம் சிறை அத்தியட்சகர், ஆணையாளரிடம் முறையிடலாமென அவர்கள் சுட்டிக்கடடினர்.
எனினும் அவ்வாறு எந்த முறைப்பாடும் நேற்றுவரை கிடைக்கவில்லையென சிறை அதிகாரி ஒருவர் நீதிவானுக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து, பிரதான சந்தேக நபராகக் கருதித் தேடப்படும் சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா ஆகிய சகோதரர்களுக்கு தங்க இடமளித்ததாக கூறி மாவனெல்லை பொலிஸாரால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கம்பொளை – உலப்பனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் சார்பில் சட்டத்தரணி தெஹ்லான் ஆஜரானார். அவர், குறித்த பெண்ணையேனும் பிணையில் விடுவிக்குமாறும்,. இந்தக் குற்றங்கள் தொடர்பிலோ அதனைச் செய்த பிரதான சந்தேக நபர்கள் தொடர்பிலோ குறித்த பெண் எதனையும் அறிந்திருக்கவில்லை என சுட்டிக்காட்டி வாதிட்டார். அதனால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நியாயமற்றது எனவும் கூறினார்.
எனினும், முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் அவற்றை பதிவு செய்துகொள்வதாக அறிவித்ததுடன், குறித்த பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 3 (ஆ) பிரிவின் கீழ் உள்ளதால் தனக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.
அதன்படி அக்தாப், முப்தி, முனீப், இர்ஷாத், அஸீஸ், முஹம்மட் பெளஸான், முஸ்தபா மொஹம்மட் பயாஸ், பயாஸ் அஹமட், மொஹம்மட் இப்ராஹீம், ஆகில் அஹமட், அப்துல் ஜப்பார் பதுர்தீன், சித்தி நஸீரா இஸ்ஸதீன் ஆகிய 13 பேரையும் எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில் கோண்வல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் பொதுஹர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டிநுவர – வெலம்பட பொலிஸ் பிரிவில் பதிவானது.
அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் அந்த மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை சேதப்படுத்தப்படும் அதேநேரம் அதனை அண்டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதேதினம் அதிகாலை 4.00 மனியளவில் மாவனெல்லை – திதுருவத்த சந்தியிலுள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதபப்டுத்தப்பட்டுள்ளது. இதன்போதுதான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இவ்வருவருக்கத்தக்க சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடயமும் கிடைத்திருந்தது.
திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர். இவ்வாறு வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது முதல் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி