அளுத்கம வன்முறைகளுக்கு காரணமாக கூறப்பட்ட தாக்குதல் சம்பவம்: குற்றச்சாட்டிலிருந்து மூவரும் விடுவிப்பு
தர்கா நகரில் பௌத்த பிக்கு ஒருவரையும் அவரது சாரதியையும் அளுத்கமையில் வைத்து தாக்கி காயங்களுக்குள்ளாக்கியதாக மூன்று முஸ்லிம்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த வழக்கில் மூவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்ததுடன் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் களுத்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி சந்திமா எதிரிமான நேற்று தீர்ப்பு வழங்கினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி குருந்துவத்தை ஸ்ரீ விஜேராம விகாரையின் பிரதம குரு அயகம சமித்த தேரரையும் அவரது சாரதியான விஸ்வாவையும் தாக்கி காயங்களுக்குள்ளாக்கியதாக மௌலவி அஸ்கர் மற்றும் அவரது சகோதரர்களான அர்சாத், அப்லால் ஆகியோர் மீது இந்த வழக்கு களுத்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட மூன்று முஸ்லிம்களின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தலைமையில் சட்டத்தரணிகளான மொஹமட் இஸ்ஹார், எம்.ஐ.எம்.நளீம், எம்.அஸ்லம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். சமித்த தேரரின் சார்பில் சட்டத்தரணி பெவின் குமாரசிறி ஆஜராகியிருந்தார்.
வழக்குடன் தொடர்பான சாட்சியங்கள் நம்பகரமாக இன்மையால் மூவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக களுத்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அளுத்கமையில் ஒரு ஒழுங்கையில் மூன்று முஸ்லிம்களுக்கும், அயகம சமித்த தேரரின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமொன்றே ஒரு தாக்குதலாக சித்திரிக்கப்பட்டது. பௌத்த குரு தாக்கப்பட்டதாக தவறான செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டன.
பொதுபல சேனா அமைப்பு மற்றும் சிங்கள ராவய அமைப்பும் இந்தச் சம்பவத்தை பெரிதுபடுத்தி துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டதுடன் பொதுக் கூட்டத்தையும் பேரணியையும் ஏற்பாடு செய்து வன்முறைகளைத் தூண்டின. இந்தச் சம்பவமே முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமையிலும், பேருவளையிலும் வன்செயல்கள் உருவாகுவதற்கு காரணமாய் அமைந்தன.
அளுத்கமை, பேருவளை வன்செயல்களில் மூவர் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துகளும் அழிவுக்குள்ளாகின.
இந்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் கருத்து தெரிவிக்கையில் ‘நடந்திராத ஒரு சம்பவம் நடந்ததாக பதிவானால் அது முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பாக அமையும். தேரரும், சாரதியும் தாக்கப்படவில்லை. வாக்குவாதமே இடம்பெற்றது என்பதை எம்மால் நிரூபிக்கக் கூடியதாக இருந்தது” என்றார்.
-விடிவெள்ளி