மன்னார் சிலாவத்துறை மக்களின் பூர்வீக காணியிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமென்ற ஒரு பிரேரணையை கொண்டுவந்து அவற்றை ஐனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமென நான்கு பிரதேச சபை தவிசாளர்களும் உறுப்பினர்களும் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். மன்னார் சிலாவத்துறை மக்களின் நில விடுவிப்பதற்கான தொடர் போராட்டம் நேற்று ஏழாவது நாட்களாக சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இப்போராட்டத்தின்போது நேற்று முன்தினம் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்கள் அலிகான் ஷரீப், றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு மற்றும் முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உட்பட பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் இவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவுகளை வழங்கினர்.
இங்கு பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் தங்கள் பிரதேச சபை கூட்டங்களில் சிலாவத்துறை கடற்படையினர் சிலாவத்துறை மக்களின் பூர்வீக காணியை விட்டுக்கொடுத்து அம்மக்கள் அதில் மீள்குடியேற வழிசெய்ய வேண்டுமென்ற பிரேரணையை கொண்டுவந்து அவற்றை ஐனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.
1990 ஆம் ஆண்டு இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த பின் கடற்படையினர் மக்கள் குடியிருந்த 36 ஏக்கர் காணியை தங்கள் வசம் வைத்துக் கொண்டு மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியேற விடாதிருப்பதைத் தொடர்ந்தே இக்காணி மீட்பு தொடர் போராட்டம் ஏழாவது நாட்களாக சிலாவத்துறை முகாமுக்கு முன்னால் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.