யெமன் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 மில்லியன் பவுண் உதவி வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.
இந்த யுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் துன்பம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் எகிப்தில் இடம்பெறும் அரேபிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது கூட்டு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மே அழைப்பு விடுத்துள்ளார்.
யெமன் போர் குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் தெரேசா மே கூறியதாவது, இவ்விடயத்தில் எமது பங்கை நாம் செய்துள்ளோம், தொடர்ந்தும் செய்வோம், ஆனால் சர்வதேச சமூகம் இன்னும் கூடுதலாக உதவிசெய்ய முன்வரவேண்டும்.
யெமன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியமான உதவியை வழங்குவதற்கு இம்மாநாட்டில் எமது ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் நான் அழைப்பு விடுக்கவுள்ளேன்.
அரசியல் தீர்வொன்றைக் காண்பது மாத்திரமே இந்தப் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழியாகும்.
கைதிகள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இருதரப்பினரும் யுத்தநிறுத்த உடன்படிக்கை விதிகளை மதிக்க வேண்டியது அவசியமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா முழு ஆதரவையும் வழங்கும் எனவும் பிரித்தானிய பிரதமர் உறுதியளித்தார்.
-Vidivelli