சவூதி அரேபியாவின் அமெரிக்கத் தூதுவராக இளவரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவினால் தற்போது அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் நீண்ட காலமாக அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றியவரின் மகளாவார்.
தனியார் துறையில் கடமையாற்றி வந்த அவர் பின்னர் சவூதி அரேபியாவின் பொது விளையாட்டு அதிகார சபையில் இணைந்து கொண்டார். அங்கு விளையாட்டுக்களில் பெண்களின் பங்குபற்றுதலில் அதிக ஆர்வம் காட்டியதோடு அதில் வெற்றியும் பெற்றார். பெண்களை வலுவூட்டுவது தொடர்பில் இவர் கூடிய கரிசனை கொண்டுள்ளார்.
இளவரசி றீமா அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பது, சவூதி அரேபியாவில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதன் ஆரம்பமாகும். எனினும் சவூதி அரேபியாவின் முக்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பங்காளியான அமெரிக்காவுடன் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளது.
சவூதி அரேபிய முகவர்களால் மேற்கு நாடுகளுடனான உறவுகளைச் சீர்குலைக்கும் வகையில் கடந்த வருடம் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டமையினால் உலகம் முழுவதிலும் இருந்து வந்த விமர்சனங்களை வெற்றிகொள்ளும் ஒரு முயற்சியாக சவூதி அரேபியாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என சவூதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தித்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றிய மொஹமட் பின் சல்மானின் இளைய சகோதரரான இளவரசர் காலித் பின் சல்மானின் இடத்திற்கே இளவரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இளவரசர் காலித் பின் சல்மான் தற்போது சவூதி அரேபியாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-Vidivelli