இலங்கையில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் அதி கூடிய தொகையாக நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்ட 294.5 கிலோ எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் விளங்குகிறது. கொள்ளுப்பிட்டியிலுள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சொகுசு வாகனங்களில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 3500 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெருந் தொகை போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களாவர். இதேபோன்றுதான் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து சுமார் 2777 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 234 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். மற்றவர் முஸ்லிம் ஒருவராவார்.
இச் சம்பவங்களிடையே அண்மையில் டுபாயில் பிரபல போதைப் பொருள் கடத்தல் புள்ளியான மாகந்துரே மதூஷுடன் இணைந்து கைது செய்யப்பட்ட 19 பேரில் பலர் முஸ்லிம்களாவர். இவர்களில் கஞ்சிபான இம்ரான் என்பவரே மதூஷின் உதவியாளர் எனவும் இந்த நாட்டிலுள்ள பல முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி இந்த போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் படுகொலைகளை அவர் அரங்கேற்றியுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளன.
இவ்வாறான சம்பவங்களும் தகவல்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு பலத்த அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர், அதிகமானோர் இந்த வர்த்தகத்துடனும் போதைப் பொருள் பாவனையுடனும் சம்பந்தப்பட்டுள்ளனர் என இனவாத சக்திகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இவ்வாறான பாரிய போதைப் பொருள் வலையமைப்புகளுடன் தொடர்புடைய முஸ்லிம்கள் கைதாவது அந்தக் குற்றச்சாட்டுக்களை மெய்ப்படுத்துவதாகவே அமைந்துவிடுகின்றமை கவலைக்குரியதாகும். இதுவும் முஸ்லிம்கள் தொடர்பான பொது அபிப்பிராயம் ஏற்படக் காரணமாகியுள்ளது.
எது எப்படியிருப்பினும் இந்த வர்த்தகத்திலும் பயன்பாட்டிலும் முஸ்லிம்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினர் தொடர்புபட்டுள்ளனர் என்ற உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. இது தொடர்பில் நாம் வெளிப்படையாகப் பேச வேண்டியுள்ளது. ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவற்றினடியாக முஸ்லிம் சமூகத்தை போதை மாபியாவிடமிருந்து பாதுகாக்கவும் வேண்டியுள்ளது.
இன்று முஸ்லிம் பாடசாலைகளையும் முஸ்லிம் கிராமங்களையும் இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றமையும் சமூகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய ஆபத்தாகும். இந்த வியாபாரத்தை முஸ்லிம் பகுதிகளில் முன்னெடுப்பவர்களும் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களேயாவர். பல முஸ்லிம் நகர்ப்புறங்களில் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் பிரபல வர்த்தகர்களும் இந்த போதைப் பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் சமூகத்தில் நல்ல மனிதர்கள் போன்று வேடமிட்டு நடமாடுகின்றனர். பலர் பாடசாலைகளினதும் பள்ளிவாசல்களினதும் நிர்வாகிகளாக இருக்கின்றனர். இதுவே இன்று போதைப் பொருள் வியாபாரிகளை அழித்தொழிக்க முடியாதிருப்பதற்குக் காரணமாகும்.
அதுமாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தில் போதைப் பாவனைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்பதற்கான, அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நிலையங்கள் இல்லாதிருப்பதும் துரதிஷ்டவசமானதாகும். இதன் காரணமாக போதைக்கு அடிமையான பலர் கடைசி வரை அப் பழக்கத்திலிருந்து மீள முடியாது தவிக்கின்றனர். இவ்வாறான பலர் முஸ்லிமல்லாதவர்களால் நடாத்தப்படுகின்ற நிலையங்களிலேயே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இது அவர்களுக்கு மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதற்குத் தடையாகவுள்ளது. எனவேதான் முஸ்லிம் சமூகத்தில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பில் பாரிய ஆய்வு ஒன்று மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதனடியாகக் கண்டறியப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்மொழியப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் வீரியமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இன்றேல் போதையின் பிடியிலிருந்து நமது சமூகத்தையும் மீட்க முடியாது போய்விடும்.
-Vidivelli