எங்களது பாதுகாப்புப் படைகள் மீது புல்வாமாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்றுக்கொள்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் மறுப்பது குறித்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
”இந்தியா எங்களைத் தாக்கினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். காஷ்மீர், புல்வாமா தாக்குதல் குறித்து எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இன்றி இந்திய அரசு எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இது குறித்து இந்திய அரசு தெளிவான, உறுதியான ஆதாரங்களை வழங்கினால் நாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம்” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் வெ ளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுக்கிடையில் ஏதேனும் தொடர்பை மறுப்பதென்பது பாகிஸ்தான் அடிக்கடி கூறி வருகின்ற ஒரு சாட்டாகும். ஜய்ஷ் இ-முஹம்மட் இயக்கம் மற்றும் அவ்வாறே இந்தக் கொடூரமான குற்றத்தை நடத்திய பயங்கரவாதி ஆகியவர்களின் பொறுப்புக் கோரல்களையும் பாகிஸ்தான் பிரதம மந்திரி நிராகரித்துள்ளார். ஜய்ஷ்.இ-முஹம்மட் மற்றும் அதன் தலைவர் மஸூட் அசார் பாகிஸ்தானையே தளமாகக் கொண்டு இயங்குகின்றனர் என்பது நன்கறியப்பட்ட ஒரு உண்மையாகும். பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு இவை போதுமான ஆதாரங்களாகும்.
இந்தியா ஆதாரங்களை வழங்கினால் இந்த விடயத்தை விசாரணை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் முன்வந்துள்ளார். இது ஒரு நொண்டிச் சாக்காகும். 26/11 அன்று பயங்கரமான மும்பாய்த் தாக்குதலின், ஆதாரம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இருந்தும், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அது தொடர்பான வழக்கு எந்த விதமான முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. அதனைப் போன்றே, பத்தன்கொட் விமானத் தளத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும், அங்கு ஒரு முன்னேற்றம் காண்பிக்கப்படவில்லை. பாகிஸ்தானின் வரலாற்றுப் பதிவுகளைப் புரட்டும் போது “உத்தரவாதமளிக்கப்பட்ட நடவடிக்கை” என்பதற்கான வாக்குறுதிகள் ஒரு வெற்று உறுதி மொழிகளாகவே உள்ளன.
ஒரு புதிய சிந்தனையின் அடிப்படையில் பிரதம மந்திரி “நயா பாகிஸ்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த “நயா பாக்கிஸ்தான்” என்பதன் கீழ் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஐக்கிய நாடுகளினால் தடைசெய்யப்பட்ட ஹபீஸ் ஸயீத் போன்ற பயங்கரவாதிகளுடன் மேடைகளைப் பகிரங்கமாகவே பகிர்ந்து கொள்கின்றனர்.
பயங்கரவாதம் பற்றிப் பேசுவதற்கு தனது தயார்நிலையை அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதம மந்திரி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் வன்முறை என்பவற்றிலிருந்து விடுபட்டதான ஒரு சூழலில் ஒரு விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு இந்தியா தயார் என மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வந்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு எனத் தெரிவித்து வருகிறது. இது உண்மை நிலையிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் ஒரு மத்திய புள்ளி என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலிற்கான இந்தியாவின் பதிலிறுப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலினால் தீர்மானிக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதம மந்திரி கோடிட்டுக் காட்டியிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும். இந்தியா இந்தத் தவறான குற்றச்சாட்டை நிராகரிக்கின்றது. இந்தியாவின் ஜனநாயகம் உலகத்திற்கான ஒரு மாதிரி என்பதுடன் இதனை பாகிஸ்தான் ஒரு போதும் விளங்கிக் கொள்ளமாட்டாது. சர்வதேச சமூகத்தை தவறாக இட்டுச் செல்வதை பாகிஸ்தான நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் மற்றும் புலவாமா பயங்கரவாதத் தாக்குதலில் குற்றமிழைத்தவர்கள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து கொண்டு செயற்படுகின்ற ஏனைய பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்ததும் மற்றும் காணக்கூடியதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli