சிறுவர் துஷ்பிரயோகம்: வருடாந்தம் 10000 முறைப்பாடுகள்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி
சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் வருடாந்தம் 9000 முதல் 10000 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின்போது பிரதான எதிர்க்கட்சி எம்.பி.ரஞ்சித் டி சொய்சா எழுப்பிய கேள்விக்கு சபா பீடத்தில் சமர்ப்பித்த பதிலிலேயே இதனைத்தெரிவித்துள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் வருடாந்தம் சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 9 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 1539 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 9193 சிறுவர் துன்புறுத்தல்களும். கடந்த 2016ஆம் ஆண்டு 1275 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 8086 சிறுவர் துன்புறுத்தல்களும், கடந்த 2017 ஆம் ஆண்டு 1175 சிறுவர் துஸ்பிரயோகங்கள், 7839 சிறுவர் துன்புறுத்தல்கள் என்பன இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தாமதமாக சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு தேவையான அறிவுரைகள் கிடைப்பதில் ஏற்படும் இழுத்தடிப்புகளே காரணமாகவுள்ளன. இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோக வழக்கு நடவடிக்கைகளின்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராவது மற்றும் சில நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக வழக்குகளில் சிக்கல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக சட்டத்தரணிகள் உதவியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின்போது பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரு தடைவைகள் பாதிக்கப்படுவதனை தடுப்பதற்காக வீடியோ சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் இரண்டு நிலையங்கள் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-Vidivelli