வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய் உள்ளடங்கியுள்ளதாக பிரதியமைச்சர் புத்திக பத்திரண பகிரங்கப்படுத்தியதையடுத்து ஜனாதிபதியும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் மற்றும் நுகர்வோர் அதிகார சபையும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளதால் பால்மா பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். எனவே அரசாங்கம் தொடர்ந்தும் மக்கள் இறக்குமதி செய்யப்படும் பால்மாவை நுகரலாமா? அல்லது தவிர்க்கலாமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும், நிரந்தர தீர்வு காணவேண்டும் என நோயாளர்களைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் (NOPS) கோரிக்கை விடுத்துள்ளது.
நோயாளர்களைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் செயலாளர் தம்மிக்க எதிரிசிங்க கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதியமைச்சர் புத்திக பத்திரண வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பால்மா பாவனைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சுகாதார அமைச்சு பால்மாவினை ஆய்வுக்-குட்படுத்தியதில் அவ்வாறான கலப்படங்கள் எதுவுமில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளின் சங்கம், பால்மாவில் அடங்கியுள்ள கலப்படங்களை ஆய்வு செய்வதற்கு அரசாங்க ஆய்வு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நுகர்வோர் அதிகார சபையிடம் வளங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பால்மா இந்நாட்டுக்கு உகந்ததல்ல. தான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் பால்மா நிறுவன அதிகாரிகளை எனது காரியாலயத்துக்குள் அனுமதிப்பதில்லை என்று அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறான முரண்பாடான கருத்துகள் மக்களை பால்மா தொடர்பில் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளன.
ஜனாதிபதி சுகாதார அமைச்சராக இருந்தபோது ஏன் பால்மா இறக்குமதியின் தரத்தினை உறுதி செய்து கொள்ளவில்லை. இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை? பால்மாவில் 26% பால் கொழுப்பு இருக்க வேண்டுமென எமது நாட்டின் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் 26% கொழுப்பு அடங்கியிருந்தாலும் அது இயற்கையான பால் கொழுப்பு அல்ல எனவும் மிருக கொழுப்புகள், எண்ணெய் கொழுப்புகள், மெலமைன் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பிரித்தானிய ஆய்வு கூடத்துக்கு பால்மா மாதிரிகளை அனுப்பி பெற்றுக்கொண்ட அறிக்கையின் படியே அவர்கள் இந்த தகவல்களைத் தெரிவிக்கின்றனர். இது உண்மையென்றால் இலங்கை நுகர்வோர் இதுவரை காலம் நுகர்ந்தது பால்மா அல்ல அல்லவா?
வருடாந்தம் 400 மில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு செலுத்தி இறக்குமதி செய்யப்படுவது இயற்கை பால்மா இல்லையே. இலங்கையின் பொருளாதாரத்தை பால்மா நிறுவனங்கள் அல்லவா கொள்ளையிடுகின்றன.
இவ்வாறு பால்மா பாவனையாளர்கள் குழம்பிப்போயிருக்கும் நிலையில் அரசாங்கம் இதற்கு உடனடித் தீர்வு காணவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli