திருகோணமலை ஷண்முகா இந்துக்கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அபாயா அணிந்து கடமையில் ஈடுபடுவதற்கான தடை மனித உரிமை ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள உறுப்புரைகள் 10,12 (1), 12 (2),14 E யின் பிரகாரம் ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை முதலாவது பிரதிவாதியாகிய ஷண்முகா இந்துக்கல்லூரியின் அதிபர் மீறியிருக்கிறார். ஆசிரியைகள் அவர்களின் கலாசார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு மீண்டும் ஷண்முகா இந்துக்கல்லூரிக்குள் உள்வாங்கப்படவேண்டும் என மனித உரிமைகள் ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது.
திருகோணமலை ஷண்முகா இந்துக்கல்லூரியில் கடமையாற்றிய 4 முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றபோது அதிபர் அபாயா அணிந்து கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடத் தடைவிதித்தார். பாடசாலையில் அபாயாவுக்கு நிலவிய எதிர்ப்பினையடுத்து கல்வியமைச்சு அவர்களுக்கு தற்காலிக இடமாற்றத்தினை வழங்கியது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 9 மாதகாலமாக தற்காலிக இடமாற்றத்தின் கீழ் வேறு பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியைகள் மீண்டும் ஷண்முகா இந்துக்கல்லூரிக்கு கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் ஷண்முகா கல்லூரியின் அதிபர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இடமாற்றம் பெற்று அபாயா அணிந்து சென்ற ஆசிரியைகளுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை. பாட நேரசூசியும் வழங்கப்படவில்லை. ஷண்முகா கல்லூரி அதிபரின் இந்த நடவடிக்கைகளையடுத்து 4 ஆசிரியைகளுக்கு நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டது. அவர்கள் ஷண்முகா கல்லூரியிலிருந்தும் வெளியேறினர். மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டிருந்தனர்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் பாடசாலை மாணவர்கள் மட்டத்திலிருந்து பலப்படுத்துவதற்கு அரசாங்கம் முயன்றுவரும் நிலையில் மாணவர்களை வழிநடத்த வேண்டிய அதிபர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டமை வருந்தத்தக்கதாகும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டறிதல்களில் பல வலுவான தெளிவுகள் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 688/12 ஐத் தொடர்ந்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இல 37/95 அடிப்படையிலும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் FR 97/14 வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் கலாசார ஆடை என்பது இலங்கையின் கலாசாரத்திற்குள் உட்பட்டது என்பதோடு அவ்வாறான ஆடைகளை அணியும் உரிமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது என மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு அரசியல் யாப்பின் ஷரத்து 10 மற்றும் 14 (E) மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை சம்பந்தமான கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 37/95 ற்கு முரணாக ஷண்முகா இந்துக்கல்லூரியும் அதன் நிர்வாகமும் ஒரு குறிப்பிட்ட வகையான ஆடையை அணிந்து வரக்கூடாது என்றும் ஒரு குறிப்பிட்ட வகையான ஆடையைத்தான் அணிந்துகொண்டு வரவேண்டும் என்றும் பணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளமை அதிபர் தவறிழைத்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது.
ஷண்முகா இந்துக்கல்லூரியின் அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் வாசித்து தெளிவு பெறவேண்டும். இனங்களுக்கிடையில் ஓர் உறவுப்பாலமாக தன்னை அமைத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியைகள் தங்களது கலாசார ஆடை அபாயாவுடன் எந்தவித தடையோ, அச்சுறுத்தல்களோ இன்றி ஷண்முகா இந்துக்கல்லூரியில் கடமையாற்றுவதற்கு அதிபர் வழிவகை செய்யவேண்டும்.
நான்கு ஆசிரியைகளும் தமது கலாசார உடையுடன் ஷண்முகா இந்துக்கல்லூரியில் மீண்டும் கடமையாற்ற கல்வி அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-Vidivelli