பீடி இலை, மிளகு இறக்குமதி, ஏற்றுமதியூடாக பாரிய வரி மோசடி: கைதான பிரதான சந்தேக நபருக்கு 25ஆம் திகதி வரை விளக்கமறியல்
சுமார் 5 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியான 12 தொன் பீடி இலையை நாட்டுக்குக் கொண்டுவந்து நாலரை கோடி ரூபாவுக்கும் அதிகமான வரி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபரை, பிணையை இரத்துச் செய்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் வியட்நாம் மற்றும் பிரேசிலில் இருந்து 1445 மில்லியன் ரூபா பெறுமதியான கறுப்பு மிளகினை இறக்குமதி செய்து, இலங்கை -– இந்திய வர்த்தக உடன்படிக்கை பிரகாரம் உள்நாட்டு விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் வரி விலக்கை மோசடியாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அவற்றை ஏற்றுமதி செய்த விவகாரத்திலும், குறித்த நபரின் பிணையை இரத்துசெய்த நீதிமன்றம் அதிலும் அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. கொழும்பு 12, டாம் வீதியைச் சேர்ந்த நூர்தீன் பைசல் அஹமட் எனும் சந்தேக நபரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டார்.
கடந்த 2018 டிசம்பர் 3 ஆம் திகதி பங்களாதேஷிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பீடி இலைகள் அடங்கிய 40 அடி கொள்கலன் தொடர்பில் சந்தேகநபர் கொழும்பு – கோட்டை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அருகில் வைத்து கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 5 சந்தேக நபர்கள் சுங்க மத்திய விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜபார்தீன் மொஹம்மட் அசார்தீன், ரி.எம். றிஸ்வான் (வத்தளை மாநகர சபை உறுப்பினர், முன்னாள் உப தலைவர்), நிஸங்க ஆரச்சிலாகே அனுஷ்க நிஸங்க, சுரங்க துஷித்த குமார மற்றும் ரி.எம்.எம்.மஹ்ரூப் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த பீடி இலைகள் அடங்கிய கொள்கலன் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வத்தளை பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை துரத்திச் சென்று சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர்.
இந்நிலையில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகள், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்களிலிருந்து 6 ஆவது சந்தேக நபரான பிரதான சந்தேக நபர் நூர்தீன் அஹமட் பைசல் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரை பல தடவை விசாரணைகளுக்காக சுங்க மத்திய விசாரணைப் பிரிவினர் அழைத்தும் அவர் வருகை தராததால், அவர் தொடர்பில் மத்திய விசாரணைப் பிரிவினர் இரகசியமாக தகவல் திரட்டியுள்ளனர். அதன்படியே கடந்த 15 ஆம் திகதி, குறித்த சந்தேக நபர் கோட்டை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் வெளியே வந்து தனது காரில் ஏற முற்பட்ட போது சுங்க மத்திய விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதன்போது காரிலிருந்து சுங்கத் திணைக்களத்துடன் தொடர்புபட்ட பல முக்கிய இரகசிய ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நூர்தீன் அஹமட் பைசல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 16 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன் தினம் இதுகுறித்து சுங்க அதிகாரிகள் மன்றுக்கு வாதங்களை முன்வைத்தனர். சுங்க சட்டத்தின் 127(அ) அத்தியாயம் பிரகாரம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட வரி மோசடி தொடர்பில் பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லையென அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் சந்தேக நபர் வெளியே இருப்பது விசாரணைகளுக்குப் பாதிப்பெனவும் சுங்க மத்திய விசாரணைப் பிரிவினர் நீதிவானுக்கு கூறினர்.
எனினும் இதன்போது சந்தேக நபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, பிணை குறித்து அப்போதிருந்த தகவல்களை மையப்படுத்தியே நீதிவான் உத்தரவு கொடுத்துள்ளதாகவும் அதனை மாற்ற எந்த அதிகாரமும் இல்லை எனவும் வாதிட்டார். எனினும் நீதிவான் லோச்சனா அபேவிக்ரம, 16 ஆம் திகதி பதில் நீதிவானின் கடமையின்போது சிறு தவறுதல் காரணமாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பிணையை ரத்துச் செய்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர் பங்களாதேஷிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து அவற்றை இத்தாலிக்கு அனுப்பும் தோரணையில் பீடி இலைகளை நாட்டுக்குள் கொண்டுவந்து வரி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் சந்தேக நபர் பீடி இலைகளுடன் கொள்கலனை சுங்கத்திலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளில் சந்தேக நபருக்கு உதவிய இரு சுங்க அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் நேற்றுமுன்தினம் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
இதனிடையே இதே சந்தேக நபர் வியட்நாம் மற்றும் பிரேசிலில் இருந்து கறுப்பு மிளகை இறக்குமதி செய்து அதனை இலங்கை மிளகெனக் காட்டி, வரிவிலக்கு பெற்று இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாகவும் வரிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக சுங்கப் பிரிவினரின் மற்றொரு வழக்கும் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. 1445 மில்லியன் ரூபா பெறுமதியான மிளகு இவ்வாறு மோசடியாக வரி விலக்கின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் கூறுகின்றனர். அது தொடர்பிலும் சந்தேக நபர் பிணையிலிருந்த நிலையில் அதுவும் இரத்துச் செய்யப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
-Vidivelli