‘கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்.’
‘உலகக் குப்பை எமக்கு வேண்டாம்.’
என்ற கோஷங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக புத்தளம் எங்கும் ஒலிக்கின்றன. மக்களின் எதிர்ப்புக் கோஷங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அருவக்காடு, சேராக்குளி பகுதியில் திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தின் கீழ் நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்துள்ளது.
தமது உள்ளூராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அடுத்தமாதம் 15 ஆம் திகதி முதல் அங்கு கொட்டுமாறு புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேசசபை, கற்பிட்டி பிரதேசசபை, சிலாபம் நகரசபை, வணாத்தவில்லு, கருவலகஸ்வெவ ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவுக்கமைய அருவக்காடு சேராக்குளியில் முதலில் புத்தளத்துக் குப்பைகளே கொட்டப்படவுள்ளன. கொழும்பு குப்பையை எதிர்க்கும் மக்களின் போராட்டத்தை முறியடிக்கவே அரசாங்கம் இவ்வாறான முயற்சியில் இறங்கியுள்ளது, அதன் பின்பே கொழும்பு குப்பைகள் கொண்டுவரப்படவுள்ளன. இத்திண்மக்கழிவு அகற்றும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் காலத்திலேயே வடிவமைக்கப்பட்டது. என்றாலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டதாக அறியமுடிகிறது.
குப்பை கொட்டப்படவுள்ள அருவக்காட்டுக்கு அருகிலே வில்பத்து தேசியவனம், கங்கேவாடி மீனவர் கிராமம், கரைத்தீவு கிராமம் என்பன அமைந்துள்ளன. கலாஓயா ஆறும் இப்பிரதேசத்திற்கு அருகிலே ஓடுகிறது. அத்தோடு புத்தளம் உப்புவளம் நிறைந்த பிரதேசமாகும். இதனால் உப்பு வளம் பாதிக்கப்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
இதேவேளை இத்திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் எந்தக்காரணம் கொண்டும் இதைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். அருவக்காடு குப்பை முகாமைத்துவத் திட்டத்தினை எதிர்ப்பவர்கள் தொடர்பில் நாம் கவலையடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அருவக்காடு பகுதி குப்பை முகாமைத்துவத் திட்டத்தினை எம்மால் 80 வருடங்களுக்கும் அதிகமாகப் பயன்படுத்த முடியும். இதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் அரசியல் பின்னணியைக் கொண்டன. இந்த ஆர்ப்பாட்டங்களை நாம் தோற்கடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். அரசு இவ்விடயத்தில் உறுதியாக இருப்பது தெளிவாகிறது. கோடிக்கணக்கான ரூபா செலவில் பூரணப்படுத்தப்பட்ட இத்திட்டம் கைவிடப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது.
மீதொட்டமுல்ல மற்றும் கொழும்பு குப்பைகள் களனி வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு குப்பைகளின் நீர்த்தன்மை அகற்றப்பட்டு பொதிகளாக கொள்கலன்களில் ஏற்றப்பட்டே புகையிரதம் மூலம் அருவக்காட்டுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
இது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய திட்டம் என அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார். அருவக்காடு குப்பைத்திட்டத்தின் கழிவு நீர், குடிநீர் மற்றும் உப்பளம் நீருடன் கலக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எத்தகைய உறுதிகளை வழங்கியபோதும், புத்தளம் மக்கள் புத்தளம் குப்பைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவ்வாறான நிலையில் மாற்றுவழி என்ன? இத்திட்டத்தைக் கைவிடுவதா? கைவிடுவதற்கு அரசு தயாராக இருக்கிறதா-? என்ற வினாக்கள் எழுகின்றன.
இத்திட்டத்தினால் மக்களுக்கும், சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பு பற்றி உடனடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அதேவேளை தொடர்ந்தும் 5 மாதங்களுக்கு மேலாக போராட்டங்களை நடாத்தி வரும் மக்கள் நீதிமன்றின் மூலம் தடையுத்தரவு ஒன்றினைக் கோரலாம். நீதிமன்றத் தீர்ப்பு இப்பிரச்சினைக்கு ஓர் தீர்வினைத் தரலாம்.
-Vidivelli