பாகிஸ்தான் நாட்டின் கடற்படையினரின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அமான்-19′ என்ற சர்வதேச கடற்படை பயிற்சி நடவடிக்கையில் 46 நாடுகள் பங்குபற்றியதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயிற்சிநெறிகள் கராச்சி கடற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. 5 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்பயிற்சிநெறியின் சகல பயிற்சிகளும் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இதன்போது, துறைமுகத்திலும், கடலிலும் எவ்வாறு பாதுகாப்பை வலுப்படுத்துவது என்பது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் மனிதாபிமான உதவிகளை செயற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த பயிற்சி நெறிகள், கடற்படை உட்கட்டமைப்பு, பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிரான உத்திகள், நுட்பங்கள் என்பவற்றை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ‘அமான்’ கடற்படை பயிற்சி நெறிகளை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli