33.9 மில்லியன் ரூபா மோசடி விவகாரம்: கோத்தாவின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது
22 முதல் தொடர் விசாரணை
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு பிரதம நீதியரசரின் கட்டளைக்கமையவே நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அந்த நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதனால் குறித்த வழக்கை விஷேட மேல் நீதிமன்று விசாரிக்க முடியாதென்ற கோத்தா உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்த விஷேட மேல் நீதிமன்றம், குறித்த வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் விசாரிக்க முடியுமா? முடியாதா? என்பது குறித்த தீர்ப்பை அறிவிக்க அந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது.
விஷேட மேல்நீதிமன்ற தலைமை நீதிபதி சம்பத் அபேகோன், நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இவ்வாறு அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது தீர்ப்பை அறிவித்த தலைமை நீதிபதி சம்பத் அபேகோன்,
“சட்ட மா அதிபரால் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கை பிரதம நீதியரசரின் கட்டளைக்கமையவே இம்மன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதனால் இவ்வழக்கை விசாரிக்க இந்த மன்றுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என எம்மால் முடிவெடுக்க முடியாது. எனவே பிரதிவாதிகளின் அடிப்படை ஆட்சேபனையை நிராகரிக்கின்றோம்” என அறிவித்தார்.
இந்நிலையில் பிரதிவாதிகள் மன்றில் முன்வைத்த கோரிக்கைக்கமைய, இவ்வழக்கை நிரந்தர விஷேட மேல் நீதிமன்றில் விசாரிக்குமாறு பிரதம நீதியர்சர் விடுத்த கட்டளையின் எழுத்துமூலப் பிரதியையும் தலைமை நீதிபதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு வழங்கினார்.
இந்நிலையில் குறித்த வழக்கின் விசரணைகளை ஆரம்பிக்க, சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பிரதிவாதிகள் குற்றவாளியா, சுற்றவாளியா என்ற பதிலை அவர்களிடம் கோர நீதிமன்றம் முற்பட்டது. இதன்போது வழக்கின் 6 ஆவது பிரதிவாதியான மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய சுகயீனம் காரணமாக நேற்று நீதிமன்றில் ஆஜராகி இருக்காமையை அவரது சட்டத்தரணிகள் மருத்துவ அறிக்கையுடன் மன்றில் சுட்டிக்காட்டினர். இந் நிலையில் பிரதிவாதிகள் குற்றச்சாட்டுக்களுக்கு குற்றவாளியா சுற்றவாளியா என்ற பதிலை பெறும் போது பிரதிவாதிகள் அனைவரும் இருப்பது சிறந்ததெனத் தீர்மானித்த நீதிமன்றம், அந்தப் பதிலை எதிர்வரும் 22 ஆம் திகதி அனைத்து பிரதிவாதிகளும் மன்றில் ஆஜராகி வழங்கவும் அதன் பின்னர் விசாரணைகளை ஆரம்பிக்கவும் தீர்மானித்து உத்தரவு பிறப்பித்தது.
33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ உள்ளிட்ட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கடந்த ஜனவரி 22 முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் கடந்த ஜனவரி 17 ஆம் திகதி தீர்மானித்திருந்தது. எனினும் அன்றைய தினம் பிரதிவாதிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனை காரணமாக அவ்வழக்கு விசாரணை அது தொடர்பில் ஆராய ஒத்திவைக்கப்பட்டிருந்தது. .
விஷேட மேல் நீதிமன்றின் 2 ஆம் வழக்காக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ, காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் லியனாராச்சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா, அக்கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர்களான கமஎத்தி ராலலாகே சந்ரா உதுலாவத்தி கமலதாஸ, சுதம்மிக கேமிந்த ஆட்டிகல, சமன்குமார அப்ரஹாம் கலப்பத்தி, மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய, மதம்பெரும ஆரச்சிலாகே ஸ்ரீமத்தி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோர் ஒன்று முதல் 7 வரையிலான சந்தேக நபர்களாக முறையே பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கும் 2015 பெப்ரவரி 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபாவை செலவழித்து வீரகெட்டிய -மெதமுலன டீ.ஏ. ராஜபக் ஷ ஞாபகார்த்த கோபுரத்தை நிர்மாணிக்க சதி செய்ததாக அனைத்துப் பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலையை நிர்மாணிக்கும்போது குறித்த 33.9 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத்தியதாக காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி ஆணைக்குழுவின் அப்போதைய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான 2 முதல் 6 வரையிலான பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக முதல் பிரதிவாதி கோத்தாபய மீதும் 7 ஆம் பிரதிவாதி மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவைகளின் பிரகாரம் இக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் முதலில் அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்த கோத்தாபய ராஜபக் ஷவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ‘2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டப் பிரகாரம் இந்த விஷேட மேல் நீதிமன்றுக்கு பாரிய நிதி மற்றும் பொருளாதார மோசடி தொடர்பிலான வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும். இந்த வழக்கு அந்தப் பட்டியலுக்குள் சேராது. இவ்வழக்கு சாதாரண மேல் நீதிமன்றில் விசாரிக்கப்படல் வேண்டும். எனவே இவ்வழக்கை விசாரிக்க இந்த விஷேட மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை’ என வாதிட்டிருந்தார். இந்த வாதத்தை ஏனைய பிரதிவாதிகளும் முன்வைத்த நிலையில் அது தொடர்பில் பதில் வாதத்தை கடந்த ஜனவரி 31 ஆம் திகதி சட்ட மா அதிபர் முன் வைத்தார்.
சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாரத்ன, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகேயுடன் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த மன்றுக்கு முன்வைக்கபப்டும் வழக்குகளை விசாரிக்கவே பிரதம நீதியரசர் இந்த மன்றை நியமித்துள்ளார். அதனால் இங்கு முன்வைக்கபப்டும் வழக்குகளை விசாரிக்காமலிருக்க இம்மன்றுக்கு அதிகாரம் இல்லை.
இம்மன்றில் முன்வைக்கும் ஒரு வழக்கை மீளப்பெற சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை. அதனைப் போன்றே மன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்காமலிருக்க இம்மன்றுக்கும் அதிகாரமில்லை. நீதிமன்ற அமைப்பு திருத்தச் சட்டம் பிரகாரம் சில வழக்குகளை இம்மன்றினால் விசாரிக்க முடியாதெனப் பிரதிவாதிகள் தரப்பில் கூறப்பட்டாலும், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இம்மன்றுக்கு அதிகாரம் உள்ளது’ என சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையிலேயே அது தொடர்பில் தீர்மானத்தை நேற்று அறிவித்த விஷேட மேல் நீதிமன்றம், கோத்தா உள்ளிட்ட பிரதிவாதிகளின் அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது. வழக்கானது எதிர்வரும் 22 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-Vidivelli