நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அதுதொடர்பான சந்தேக நபர்களின் பெயரைக்கொண்டு விமர்சிக்கவேண்டும். மாறாக அந்த நபர்களின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சிப்பது அந்தசமூகத்தை பயங்கரவாதத்துக்கு தூண்டுவது போலாகிவிடுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தாய்நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க கூடாது. புத்தளம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதில் மாற்றுக்கருத்து எமக்கிடையில் இல்லை. ஆனால் குறித்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் நபரின் பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பதாக இருந்தால் அதுதொடர்பில் நாங்கள் ஆட்சேபனை செய்யமாட்டோம்.
ஆனால், இங்கு உரையாற்றிய எம்.பி. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றம்சாட்டியே விமர்சித்து வந்தார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரியளவில் பாதிக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஆளும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துக்கொண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளித்து வந்தது. அவ்வாறான நிலையில் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
அத்துடன் இநத நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக்கூடாது என்று கருதினால் பயங்கரவாத நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அந்த நபர்களின் பெயர்களை தெரிவித்து விமர்சிக்கலாம். ஆனால் குறித்த நபர்களின் சமூகத்தை அடிப்படையாகக்கொண்டு விமர்சித்தால் குறித்த சமூகத்தை பயங்கரவாதத்துக்கு தூண்டுவதுபோல் ஆகிவிடும்.
எனவே, புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்துக்கு முன்நிறுத்தவேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடாகும். அவர்களை பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் துணைபோகமாட்டோம் என்றார்.
-Vidivelli