முஸ்லிம் விவாக வவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள திருத்த சிபாரிசுகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இறுதித் தீர்மானத்தை எட்டும் வகையில் அமைச்சர் தலதா அத்துகோரளவின் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை விஷேட கூட்டமொன்று இடம்பெற்றது.
அக்கூட்டத்திலே அமைச்சர் தலதா அத்துகோரள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களுக்கான இறுதித் தீர்மானத்தை எட்டும் பொறுப்பினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
நேற்றைய கூட்டத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான பிரிவினரும் தயாரித்து வழங்கியிருந்த இரு வேறுபட்ட சிபாரிசு அறிக்கைகள் கூட்டத்தில் ஆராயப்பட்டன. இருதரப்பும் சில விடயங்களில் முரண்பாடான கருத்துக்களை அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், ‘அமைச்சர் தலதா அத்துகோரள சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கியுள்ளார்.
நாம் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரு தரப்பினரதும் அறிக்கையை ஆராயவுள்ளோம். முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஆகியோருடனும் கலந்துடையாடல்களை நடத்தவுள்ளோம். முரண்பாடான கருத்துக்களில் நாம் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டியுள்ளது. இந்த பொறுப்புகளை விரைவில் முன்னெடுப்போம் என்றார். கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அகில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி கருத்து தெரிவிக்கையில், இன்றைய (நேற்று) அமைச்சர் தலதா அத்துகோரளவின் தலைமையிலான கூட்டம் சுமுகமாக இடம்பெற்றது. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் முதற்கட்டமாக நிர்வாக கட்டமைப்பிலே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான பரிந்துரைகளை ஆராயுமாறு அமைச்சர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கோரியுள்ளார். முதற்கட்டமாக காதி நீதிமன்ற முறைமை காதி நீதிபதிகளின் கொடுப்பனவு அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளப்படும். அதன் பின்பு கட்டம் கட்டமாக ஏனைய விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா கருத்து தெரிவிக்கையில், இன்றைய (நேற்று) கூட்டம் முன்னேற்றகரமாக அமைந்திருந்தது. எமது சட்டத்திருத்த சிபாரிசு அறிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை நீதியரசரிடம் வழங்குவார்கள். தேவையேற்படின் எங்களுடனும் கலந்துரையாடுவார்கள் என்றார்.
இது தொடர்பில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்த சிபாரிசு குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் கருத்து தெரிவிக்கையில்,
சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான அறிக்கையை தயாரிக்கும்போது முஸ்லிம் சமூகத்தின் கருத்துகள் பெறப்பட்டன. அதுபோன்று தற்போது அறிக்கை மொழி பெயர்க்கப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். எமது அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை அமைச்சர் கோரியுள்ளார். அதன் பின்பு அவர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றார்.
-Vidivelli