தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வருகின்ற நிலையில், இது தொடர்பான யோசனை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இந்த தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையில் பிரதான பேசுபொருளாகியிருப்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டுப் பெற்றுக் கொண்ட ஓர் ஆசனத்தை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய தேசிய அரசாங்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் இதற்கு அனுமதியுள்ளது. அதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட கட்சியுடனோ அல்லது சுயேட்சைக்குழுவுடனோ இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என அரசியலமைப்பு கூறுகிறது. அந்தவகையில் சட்ட ரீதியாகக் கூட இதனைச் சரி என வாதிடலாம்.
எனினும் நாட்டின் சமகால சூழ்நிலையிலும் அரசாங்கத்தின் போக்கின் அடிப்படையிலும் இந்த தேசிய அரசாங்க முயற்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போவது எந்தவகையில் நியாயமானது என்பதை அக் கட்சி சற்று மீள்பரிசீலனை செய்வது சிறந்ததாகும்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் உறுதியான ஆட்சிக்கும் தேசிய அரசாங்கம் அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறினாலும் கூட, அக் கட்சியில் மீதமுள்ள பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அழகு பார்க்கவும் தமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்தோரின் அமைச்சுப் பதவிக்கான கோரிக்கைகளை நிறைவேற்றவுமே இந்த தேசிய அரசாங்கம் எனும் நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்பதே யதார்த்தமாகும்.
ஆக ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்காக முஸ்லிம் காங்கிரஸ் பலிக்கடாவாக்கப்படுகின்றது. இதற்கு மு.கா.வும் தெரிந்து கொண்டே துணை போகிறது. தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிப்பதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் நலன்கிடைக்கும் என்றால் அல்லது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதில் ஒரு நியாயத்தைக் காணலாம். அவ்வாறன்றி ஒரு கட்சிக்குத் தேவையான அமைச்சுப் பதவிகளை அதிகரித்துக் கொள்வதற்காக இந்த யோசனைக்கு துணை போவது எந்தவகையில் நியாயமானது எனத் தெரியவில்லை.
கடந்த 52 நாட்கள் அரசியல் நெருக்கடியின்போது ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்னின்றதாக கூறும் முஸ்லிம் காங்கிரஸ், இந்த தேசிய அரசாங்க யோசனைக்கு துணைபோவது அதற்கு முரணானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள தேசிய அரசாங்க யோசனை ஏலவே கடும் எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளது. சுதந்திர தின உரையில் ஜனாதிபதி இதனை அனுமதிக்க முடியாது என்று விமர்சித்திருந்தார். எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும் இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியும் இந்த தேசிய அரசாங்க நகர்வை கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு வெட்கக் கேடான செயல் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சாடியுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பெரும்பாலான கட்சிகள் இதனை எதிர்த்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த நகர்வை ஆதரிக்க முடியாது எனக் கூறியுள்ளது.
ஆக, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் நாட்டுக்கு எந்தவித நலனும் கிடைத்துவிடப் போவதில்லை. மாறாக மக்களின் வரிப் பணமே வீணடிக்கப்படும். அந்த வகையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க துணை நின்ற முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்காக தேசிய அராசங்கம் அமைக்கும் யோசனைக்கு துணை போவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சிந்தித்து செயற்படும் என்றும் தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் என்றும் நம்புகிறோம்.
-Vidivelli