பங்களாதேஷ் மற்றும் சவூதி அரேபியா ஆகியவற்றிற்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பினை மேலும் மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி பாதுகாப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உடன்படிக்கையின் கீழ் யுத்தத்தினால் சீர்குலைந்துள்ள சவூதி – யெமன் எல்லையில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளைச் செயலிழக்கச் செய்யும் பணிகளில் பங்களாதேஷ் ஈடுபடும் என துருக்கியின் அனடொலு செய்தி முகவரகத்திற்கு பங்களாதேஷ் இராணுவப் பேச்சாளர் லெப்டினென்ட் கேர்ணல் மொஹமட் றஷீதல் ஹஸன் தெரிவித்தார்.
றியாதில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி ஜெனரல் அஸீஸ் அஹமட் இதனை அறிவித்ததாக ஹஸன் உறுதிப்படுத்தினார்.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சவூதியினைத் தளமாகக் கொண்டு 34 நாடுகளின் இஸ்லாமிய இராணுவக் கூட்டணியின் உறுப்பு நாடுகளுள் ஒன்றான பங்களாதேஷை சேர்ந்த 2 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர்.
-Vidivelli