- சஜ்ஜாத் சஹிகாத்
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் மீதான கடுமையான தந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்ந்தும் அரங்கேறினாலும், சுதந்திரத்திற்கான போராட்டம் காஷ்மீரிகளின் மத்தியில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியா காஷ்மீரினை இழந்துவிட்டதா? என்ற கேள்விக்குறியுடன் இத்தருணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர் திருப்புமுனையினை அடைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடம்பெறும் விடுதலைக்கான தீவிர போராட்டத்தினாலும், அரச தீவிரவாதத்தினாலும் ஆளும் பா.ஜ.க. அரசாங்கம் உள்நாடு மற்றும் சர்வதேசத்தில் பாரிய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.
“இந்தியா காஷ்மீரினை இழந்து கொண்டிருக்கின்றதா?” என்ற தலைப்பின் கீழ் பி.பி.சியின் பதிப்பிலே பிரசுரமான கட்டுரையானது காஷ்மீரிலே இந்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தின் உச்சத்தினை விவரிக்கின்றது. காஷ்மீரிலே “கற்களுடன் மிரட்டுகின்ற காஷ்மீரின் இளம் பெண்கள்” இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினையிலே புதிய அச்சுறுத்தல் என தி வோஷிங்டன் போஸ்ட் பதிப்பிலும் பிரசுரமாகியிருந்தது. “காஷ்மீரின் கொடூரம் மற்றும் கோழைத்தனம்” என நியூயோர்க் டைம்ஸ் பதிப்பில் பிரசுரமான ஆசிரியர் தலையங்கத்திலேயும் காஷ்மீரின் நிகழ்கால நிலைமைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. அத்துடன், காஷ்மீரிலே இடம்பெறும் வன்முறைகளுக்கெதிராக ஒரு புதுவிதமான எதிர்ப்புப் போராட்டம் எழுச்சி பெற்றிருக்கின்றது என ‘தி அட்லாந்திக்’ அவதானித்திருந்தது.
இந்திய புலனாய்வு அமைப்பான ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலத், தனிமை மற்றும் இளைஞர்களின் கோபத்தினால் இளம் காஷ்மீரிகள் கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆயுதமில்லாத போராட்டமானது மிகத் தீவிரமடைந்துள்ளதாக உணர்ந்திருந்தார். மேலும் “நம்பிக்கையற்ற ஓர் உணர்வு காணப்படுகின்றது. அவர்கள் இறப்பதற்கு அஞ்சவில்லை. பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெண் பிள்ளைகள் வீதியில் நிற்கின்றனர். இது முன்னெப்போதும் இடம்பெறவில்லை” என அவர் வருந்தியிருந்தார். சந்தோஷ் பாத்தியா என்ற இந்திய ஊடகவியலாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய “ எழுகின்ற காஷ்மீர்” என்ற திறந்த மடலிலே “காஷ்மீர் என்ற பிரதேசம் எங்களுடன் காணப்பட்டாலும், காஷ்மீர் மக்கள் எங்களுடன் இல்லை. ஒவ்வொரு மரத்திலும், தொலைபேசிக் கோபுரங்களிலும் பாகிஸ்தானின் தேசியக்கொடி அசைந்து கொண்டிருக்கின்றது” என விளக்கியிருந்தார்.
காஷ்மீர் மீதான புதுடில்லியின் கொள்கைகள் “ஓர் குழப்பம் நிறைந்த தொகுதி” என வர்ணிக்கின்ற பா.ஜ.க.வின் முன்னாள் சிரேஷ்ட தலைவர் யஷ்வந்த் சிங், இந்தியா உணர்வுபூர்வமாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களினை இழந்துவிட்டது என சுட்டிக்காட்டியிருந்தார். “உணர்வுபூர்வமாக நாம் காஷ்மீர் மக்களை இழந்துவிட்டோம். எம்மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதனை நீங்கள் அறிய காஷ்மீருக்குச் செல்ல வேண்டும். மோடி மற்றும் இந்திய மாநிலக் கோட்பாட்டில் அல்லது காஷ்மீர் மக்களை கொடூரமான முறையில் அடக்குவதிலே நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகின்றது” என அவர் ஒளிவுமறைவின்றி ஏற்றுக்கொண்டார்.
1949 இலே பொதுவாக்கெடுப்பின் மூலம் காஷ்மீரில் சுய- நிர்ணய உரிமையினை வழங்குவது தொடர்பான தீர்மானத்தினை ஐ.நா.விற்கு நினைவூட்டுமுகமாக காஷ்மீரியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 5 ஆம் திகதியினை இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கான ஐ.நா.வின் காஷ்மீர் தீர்மானத்தின் தினமாக அவதானிக்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
2016 ஆகஸ்ட் 27 ‘தி வயர்’ என்ற சஞ்சிகையிலே பிரசுரமான அறிக்கையிலே இந்திய புலனாய்வு அமைப்பான ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலத், காஷ்மீர் பிரச்சினையில் முக்கியமான அங்கமாகத் திகழும் பாகிஸ்தானின் வகிபாகத்துடன் ஹுரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான தேவை இந்திய அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என்று கூறியிருந்தார். காஷ்மீரிகளின் எழுச்சியின் பின்புலத்தில் நூறு வீதம் சுதேசிகளே காணப்படுகின்றனர் எனவும் கூறியிருந்தார். காஷ்மீரிலே இந்திய அரசாங்கத்தின் அதீத தலையீட்டிற்கான கண்டனம் இதன்மூலம் புலப்படுகின்றது.
அதேநேரம், 2016 ஆகஸ்ட் 16 முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஐ. நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், காஷ்மீரில் இடம்பெறும் கொலைகளை வெறுத்ததுடன் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் சர்ச்சையினை தீர்வு காணுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானை வலியுறுத்தினார்.
அத்துடன், பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்ட துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் ஏர்டொகன், 2016 நவம்பர் 17 ஆம் திகதி முன்னாள் பாகிஸ்தானிய பிரதமருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டிலே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையிலே பெருகிவரும் பதற்றங்கள் மற்றும் காஷ்மீரில் இடம்பெறும் அட்டூழியங்கள் புறக்கணிக்கப்பட முடியாது எனவும் காஷ்மீர் பிரச்சினைக்கு துரிதமான ஒரு தீர்வு வேண்டும் என அவர் வலியுறுத்தினார். துருக்கி அரசாங்கம் எப்பொழுதும் காஷ்மீர் மக்களுக்கான ஆதரவினை வழங்கும் என துருக்கிய ஜனாதிபதி அழுத்திக் கூறியிருந்தார்.
முன்னதாக பாகிஸ்தானிற்கு வருகை தந்திருந்த இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் செயலாளர் நாயகம் அயத் அமீன் மதானி, கஷ்மீரிலே இடம்பெறும் சட்டவிரோத கொலைகள் குறித்து கடுமையான கவலை வெளியிட்டிருந்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினையிலே இஸ்லாமிய மாநாட்டு அமைப்பானது பாகிஸ்தானிற்கு ஆதரவளிக்குமெனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசமடைந்துவரும் காஷ்மீரின் நிலைமைகள் குறித்து மேலைத்தேய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சந்தேகத்திற்கிடமின்றி மிகுந்த கரிசனையினை கொண்டுள்ளனர். உதாரணமாக, 2016 செப்டெம்பர் 19 இல் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்ட இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் திருமதி ரொபேர்தா பினோடி, தங்களது நாடு அமைதியான முறையில் போராடும் காஷ்மீரிகள் மீதான படை நடவடிக்கைகள் மற்றும் கடுமையான ஆயுதங்களின் பயன்பாட்டினை எதிர்க்கின்றது எனவும் அதனை மென்மேலும் அனுமதிக்க முடியாது எனவும் கூறியிருந்தார். இத்தாலி, இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடம்பெறுகின்ற வன்முறை நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.
2018 செப்டெம்பர் 29இல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்திலே உரைநிகழ்த்திய பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேசி,
“ அயல்நாடு சமாதானப் பேச்சுவார்த்தையினை மீண்டும் தொடங்குவதற்கான பாகிஸ்தானின் அழைப்பினை வலுவில்லாத காரணங்களை கூறி நிராகரித்தது. நாங்கள் இந்தியாவுடன் அனைத்துவிதமான பிரச்சினைகள் தொடர்பாக கௌரவத்துடன் உரையாடுவதற்குத் தயாராகவிருக்கின்றோம். காஷ்மீர் பிரச்சினை பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு மிகப்பாரிய தடையாகும். கடந்த ஏழு தசாப்தங்களாக இந்தியப் படைகள் காஷ்மீர் மக்களின் மீது அட்டூழியங்களை நிகழ்த்திவருகின்றன. இந்தியா, பாகிஸ்தானின் பொறுமையினை பரிசோதிக்க கூடாது. இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு நாங்கள் பதிலளிப்போம். ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடம்பெறும் அட்டூழியங்களை அம்பலமாக்கியுள்ளது. இருநாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பானது பேச்சுவார்த்தைக்கான மிகச்சிறந்த சந்தர்ப்பமாகும். இருப்பினும், இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தையின் பொழுது அரசியலினை தேர்ந்தெடுத்திருந்தது. எல்லைப்பகுதியில் துரதிஷ்டவசமான தவறுகள் இடம்பெறுமானால் இந்தியா பாகிஸ்தானின் பதிலடிகளை தாங்கிக் கொள்ளவேண்டும்” என குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளரினால் 2018 ஜூன் 14 இல் வெளியிடப்பட்ட அறிக்கை, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடம்பெற்ற அட்டூழியங்களை “காஷ்மீரின் நிலைமைகள்” என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. “2016 ஜுலை மாதத்திலிருந்து மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிய அரசாங்கங்களை காஷ்மீரின் மனித உரிமை நிலைமைகளை ஆய்வு செய்வதற்கான தடைகளற்ற அனுமதியினை கோரியிருந்தது. இருப்பினும், அக்கோரிக்கை இந்தியாவினால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதற்கான அனுமதியினை வழங்கியது. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரிற்குள் ஐ.நா.வின் குழு செல்வதற்கு நிபந்தனைகளற்ற அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னர் தொலை கண்காணிப்பு முறையினை பயன்படுத்தி மனித உரிமை நிலைமைகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டது. சுதந்திரமான நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட அவ்வறிக்கையானது பலரது புருவங்களையும் உயர்த்தியது. 2016 ஜுலை தொடக்கம் 2018 ஏப்ரல் வரையில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மனித உரிமை நிலைமைகள் குறித்தே அவ்வறிக்கை கவனம் செலுத்தியிருந்தது. இக்காலப்பகுதியில் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளருக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்த பல குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றன.”
இந்திய அரசாங்கமானது காஷ்மீர் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் மக்களின் குறைகள் மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கான தீர்வினை வழங்குவதனைவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்ற இயக்கங்களை நசுக்க ஆயுதப் படைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆகவே இந்தியாவின் நம்பத்தகாத கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் படுதோல்வியடைந்துவிட்டது என்பது தெளிவாக தெரிகின்றது.
பாரதீய ஜனதா கட்சியினை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பாகிஸ்தானின் முஹம்மத் அலி ஜின்னாவினை புகழ்ந்தமைக்காகவும், இந்திய முஸ்லிம்களின் வேதனைகளை தனது “ஜின்னா: இந்தியா, பகிர்வு” என்ற நூலிலே குறிப்பிட்டமைக்காகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். “இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தியாவிற்கு விசுவாசமானவர், இந்திய முஸ்லிம்களின் கண்களில் வேதனையை பாருங்கள்” என சிறுபான்மையினர் மீதான பா.ஜ.க.வின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்தியா மூன்றாவது பாகப்பிரிவினையினை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்தார்.
உண்மை யாதெனில், இந்தியாவிற்கு இரு தெரிவுகள் காணப்படுகின்றன. முதலாவது இந்தியாவில் காணப்படும் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மற்றும் அவர்களை ஒடுக்குவதற்கான இராணுவப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கொள்ளல். இரண்டாவது யதார்த்த அணுகுமுறையினை பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் ஜஷ்வந்த் சிங் அவரது நுலிலே சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் சுதந்திரத்திற்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளமை பாரிய திருப்பு முனையாகும். அத்துடன் இரக்கமற்ற படைகளால் காஷ்மீரிகளின் போராட்டத்தினை அடக்குவதிலே இந்தியா தோற்றுவிடும் என்பதனை எவ்வித ஐயமுமில்லாமல் கூறமுடியும்.
-Vidivelli