பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை
துருக்கி ஜனாதிபதி அர்துகான் தெரிவிப்பு
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய பாராளுமன்றமான நெஸ்ஸெட்டின் முஸ்லிம் உறுப்பினர்களை துருக்கிய ஜனாதிபதி அர்துகான் இஸ்தான்பூலில் வரவேற்றார்.
துருக்கிய ஜனாதிபதிக்கும் இஸ்ரேலிய பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல் தரப்யா ஜனாதிபதி வளாகத்தில் (ஹூபர் வில்லா) மூடிய கதவுகளுக்குப் பின்னால் சுமார் 90 நிமிடங்கள் வரை நடைபெற்றது என ஜனாதிபதியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இக் கலந்துரையாடலின் போது பலஸ்தீன மற்றும் அதன் மக்கள் தொடர்பான ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனத் தெரிவித்த அர்துகான், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்தவதற்கும் முடியுமான அனைத்தையும் துருக்கி மேற்கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டினார்.
காஸாவில் டெல் அவிவின் அடக்குமுறைகள் அதேபோன்று யூத தேசத்தின் சட்டத்திற்கு எதிராகவும், துருக்கிக்கு எதிரான அடிப்படையற்ற கட்டுக்கதைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய சட்டமன்றத்தில் பலஸ்தீனர்களின் மனவுணர்வினைப் பிரதிபலிக்கும் சேவையினை வழங்கி வருகின்றமைக்காக நெஸ்ஸெட் உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
இஸ்ரேலை யூத நாடாக வரையறை செய்யும் சர்ச்சைக்குரிய சட்டம் பலஸ்தீன குடிமக்களின் உரிமைகளை மலினப்படுத்தும் செயற்பாடாகும் எனத் தெரிவித்த அவர், அக்குழுவினர் ஒற்றுமையுடனும், இணக்கப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அரசகரும மொழியாக இருந்த அரபு மொழியை நீக்கிவிட்டு ஹீப்ரு மொழியை மாத்திரம் அரசகரும மொழியாக இஸ்ரேல் சட்டமன்றம் அங்கீகரித்துள்ள அதேவேளை, இணைந்த ஜெரூசலத்தை அதன் தலைநகராகக் கொண்டு அரபு மொழிக்கு விசேட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் ஏலவே இஸ்ரேலிய யூதர்களாலும், அரசாங்கத்தினாலும் பாகுபாடு காட்டப்பட்டு வரும் அரேபிய மக்கள் தாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்படுவதாக அம் மக்கள் உணரும் நிலையில் மேலும் தனிமைப்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
இஸ்ரேலியக் குடியுரிமையினைக் கொண்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் 21 வீதமாகக் காணப்படுவதோடு, இஸ்ரேலிய அரபுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் இஸ்ரேலிய பாராளுமன்றமான நெஸ்ஸெட்டில் உறுப்பினர்களையும் கொண்டுள்ளனர்.
-Vidivelli