எட்டு மாணவர்கள் விடுதலை குறித்து மைத்திரி, ரணில், சஜித்துடன் பேச்சு
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடனும் முஸ்லிம் தலைமைகள் பேச்சு
ஹொரவப்பொத்தான கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்களின் விடுதலை தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பி.பீ.மண்டாவெல ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு, நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரே இவ்வாறு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட 8 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அறியாத்தனத்தினாலே இவ்வாறு கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்கள். அதனால் அவர்களை மன்னித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் நானும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் கதைத்திருக்கிறோம். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பி.பீ மண்டாவலவிடமும் கதைத்துள்ளோம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதமருடன் கதைத்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கெதிரான குற்றப்பத்திரிகையை தொல்பொருள் திணைக்களமே தயாரிக்கும். கலாசார அமைச்சராகப் பணிபுரியும் சஜித் பிரேமதாச தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாலே விடுதலைக்கான சாத்தியங்கள் உள்ளன. குற்றப்பத்திரிகை தண்டனை சட்டக்கோவையின் கீழ் தயாரிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பிணையில் எடுக்கலாம். தொல்பொருள் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் பிணையில் எடுக்க முடியாது. நான் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலையளிப்பது தொடர்பில் சாதகமாகப் பதில் கிடைக்கவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாணவர்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
இதேவேளை, குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், வீடமைப்பு , நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவுடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வும் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பி.பீ.மண்டாவலயுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட மாணவர்கள் நாளை 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை கெப்பித்திகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.
சந்தேக நபர்களான பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன், ருஸ்தி ஹபீப் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli