இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறுகின்றது. 6 ஆயிரத்து 454 பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பும் 850 கலை, கலாசார நடனக்கலைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன், இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளின் சிறப்பு அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ் மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொள்கின்றனர்.
இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினமான இன்று நாடு பூராகவும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் கடந்த 2 ஆம் திகதியிலிருந்தே சர்வமத ஆசிபெறும் நிகழ்வுகள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன. தேசியதின வைபவத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன்தினம் முழுநாள் பிரித் பாராயண வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நேற்று முன்தினம் இரவு 9 மணி தொடக்கம் நேற்று அதிகாலை வரையில் இவ்வாறான ஆசி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதேபோல் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய ஆலயங்களிலும் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்று காலை சுதந்திர தின நிகழ்வுகளுக்கு முன்னதாக கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இன்று காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சகல உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், அரச அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் இரண்டாம் நிலை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறப்பு அதிதி
இன்றைய சுதந்திர தினத்தின் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ் மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொள்ளவுள்ளனர். சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் மாலைதீவு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் நேற்று காலை கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தனர். அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் வரவேற்றனர்.
இரு மொழிகளில் தேசியகீதம்
இம்முறையும் வழமைபோன்று தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தமிழ், முஸ்லிம், சிங்கள, பாடசாலைகளின் மாணவ, மாணவிகளால் இசைக்கப்படவுள்ளது. அத்துடன் ஜயமங்களகாதாவும் இசைக்கப்படவுள்ளது.
தேசிய கொடியை பறக்கவிட வேண்டும்
இம்முறை தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் சுதந்திரதினமான இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு நாட்டில் சகல பிரதேசங்களிலும் வீடுகளில் மக்கள் தேசியக் கொடியை பறக்கவிட்டு தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென்று அரசாங்கம் சகலருக்கும் அறிவித்துள்ளது.
இராணுவ அணிவகுப்பு நிகழ்வுகள்
மேலும், வழைமைபோல் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் இலங்கை முப்படையின் அணிவகுப்புகள், கண்காட்சி நிகழ்வுகள் மற்றும் சாகச நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன. இதற்காக கடந்த சில தினங்களாகவே இலங்கை பாதுகாப்பு படையினர் ஒத்திகை நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
இம்முறை பாதுகாப்பு அணிவகுப்பு நிகழ்வுகளுக்காக 3872 இராணுவ வீரர்கள், 891 கடற்படை வீரர்கள், 907 விமானப் படைவீரர்கள், 600 பொலிஸார், 523 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், 596 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 100 தேசிய இளைஞர் படையினர் இந்த தேசிய தின மரியாதை அணிவகுப்பில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அவற்றுடன் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற முப்படை வீரர்களும் வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்தவாறு அணிவகுத்துச் செல்லவுள்ளனர்.
அத்துடன் இராணுவ அணிவகுப்பின் போது இராணுவ ஆயுதங்கள், கனரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள், ஆட்லறி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்பநாய்கள், பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயத தளபாடங்கள், உபகரணங்களும் பயன்படுத்தப்படவுள்ளதுடன் பொதுமக்கள் அவற்றை கண்டு ரசிக்கக்கூடிய வகையில் பொது அணிவகுப்பு நிகழ்வுகளும் இடம்பெறும்.
விமானப் படையினரின் கபீர், கே 8, எப் 7 ரக தாக்குதல் விமானங்களும் சி 130, வை 12, பிரி 6 ரக விமானங்கள் மற்றும் பெல் 412, பெல் 212 எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே சாகசங்களை காண்பித்தவாறு செல்லவுள்ளன. கடற்படையின் பிரதான 16 ரோந்துக்கப்பல்களும் அண்மையில் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த கப்பல்களும் ஏனைய சிறு ரக படகுகளும் கடற்படையின் அணிவகுப்பில் இடம்பெறும்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
இன்றைய தினம் தேசிய தின நிகழ்வுகளில் நாட்டின் தேசியக் கொடியை சம்பிரதாய முறையில் ஜனாதிபதி ஏற்றியவுடன் அணிவகுப்பு நிகழ்வுகளை அடுத்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.
வீதிகள் மூடப்படும்
சுதந்திர தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் இன்று நண்பகல் 12 மணிவரை மூடப்படும். காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலும் சைத்திய வீதியூடாகவும் வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலிமுகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் இன்று நண்பகல் 12 மணியுடன் கொழும்பில் வீதிப்போக்குவரத்து வழமைக்குத் திரும்பும்.
முஸ்லிம் சமய நிகழ்வுகள்
இதேவேளை, தேசிய சுதந்திரதின முஸ்லிம் சமய நிகழ்வுகள் இன்று காலை 6 மணிக்கு ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீமின் தலைமையில் இடம்பெறவுள்ளன. இதில், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
-Vidivelli