சிங்கள – முஸ்லிம் தொடர்புகள் வரலாற்று ஆய்வுகளில் மிக வலிமையாக உள்ளன

வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ரோஹித்த திசாநாயக்க

0 989
  • ஜே.எம்.ஹபீஸ்

இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வொன்றில் கண்டி மாவட்டத்தில் மடவளை என்ற இடத்தில் பள்ளியொன்று கட்டுவதற்கு பௌத்தர் ஒருவரும், விகாரை ஒன்று கட்டுவதற்கு முஸ்லிம் ஒருவரும் காணிகளை அன்பளிப்புச் செய்த வரலாற்றைக் காணக்கிடைத்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ரோஹித்த திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்குமான புத்திஜீவிகள் சங்கம் கண்டியில் ஒழுங்கு செய்த கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி  எம்.ஏ.சீ.எம்.யாக்கூப் தலைமையில் நடந்த இக்கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது,

இவ்வாறான ஒரு கூட்டத்தில் முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், நான் சாதரணமாக மடவளையிலுள்ள சில முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வேன். அவ்வாறு நான் அங்கு செல்லும்போது பல முதலாளிமார்கள் எனக்கு நண்பர்களாக உள்ளனர். அதில் ஒரு முதலாளி நண்பர் என்னிடம் சொன்னார் மடவளையில் விகாரை கட்டுவதற்கு முஸ்லிம் ஒருவரும் பள்ளிவாசல் கட்டுவதற்கு பௌத்தர் ஒருவரும் காணி வழங்கியுள்ளதாக. பின்னர் நான் ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மை என்பதை ஆய்வுமூலம் அறிந்துகொண்டேன்.  அந்த முதலாளி நண்பர் அடிக்கடி என்னிடம் கேட்பார் எப்போது அந்த ஆய்வு முடிவடையும் என்று. அது எனக்கு நினைவிற்கு வருகிறது. அதனை இங்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் மேற்கொண்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான இந்த ஆய்வை கட்டாயம் பூரணப்படுத்தும்படி கலாநிதி சுக்ரி ஒருமுறை என்னிடம் சொன்னார்.  அதன்படி சில ஆய்வுகளைச் செய்தேன். 2002இல் இந்த ஆய்வை மேற்கொண்டேன். எனக்கு சில விடயங்களை சரியாகத் தெரிந்துகொள்ள அரபு மொழியில் எனது குறைபாடு பாரிய சவாலாக இருந்தது.

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான உறவுகள் பற்றி அநேகருக்குத் தெரியாது. அதேநேரம் எமக்கிடையே பிரிவு உள்ளதாகக் காட்டப்பட்டால் பிரிவினைவாதிகளுக்கு அது ஒரு பெரிய  பக்கத்துணையாகவும் மாறிவிடும்.

எமது பிரதேச கிராமங்களிலுள்ள முதலாளிமார்களுக்கும் எமது தாய்மார்களுக்குமிடையே பாரிய இணைப்பு காணப்படுகிறது. சில முதலாளிமார் எமது தாய்மார்களையும், எமது தாய்மார்கள் முதலாளிமார்களதும் சுகதுக்கங்களை அடிக்கடி விசாரிப்பர். சில நாட்கள் காணாவிட்டாலும் ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்பது வழக்கமாக உள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை ஆண்ட ஒரு அரசனுக்கு முஹம்மத் நபி என்ன செய்கிறார் என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சில தூதுவர்களை மதீனா நகருக்கு அனுப்பிவைக்கிறார். ஆனால் தூதுவர்கள் மதீனாவை சென்றடையும்போது முஹம்மத் நபி அவர்கள் மரணமடைந்திருந்த தகவல் அவர்களுக்கு கிடைக்கிறது. பின்னர் திரும்பிவந்த அவர்கள் அத்தகவலை மேற்படி அரசனுக்கு தெரிவிக்கினறனர். எனது ஆய்விற்குக் கிடைத்த தகவல்களில் இலங்கையில் முஸ்லிமகள் தொடர்பாக கிடைத்த ஆகக்கூடிய காலத்து அல்லது முஸ்லிம்கள் பற்றிய முதலாவது தகவலாக இது உள்ளது. அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் வரலாறு பற்றிய முதலாவது தகவல் இதுவாகப் பதிவாகியுள்ளது. எனவே இலங்கை முஸ்லிம்கள் பற்றிய 1400 வருட வரலாற்றை அது தெரிவிக்கிறது. .

கி.பி 800ஆம் வருடத்தில்  அரேபிய வர்த்தகர் ஒருவர் இலங்கையில் மரணித்துவிட்டார். அவரின் உடல் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஒரு கப்பலில் எகிப்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவலும் பதிவாகியுள்ளது.  மேற்படி தகவல் எழுதப்பட்ட நூல் 1990களில் அதன் மொழிபெயர்ப்பு மூலமே கிடைத்தது. அதுகாலவரை அரபு மொழியில் இருந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏறக்குறைய 1200 வருடங்களாக அது மறைக்கப்பட்டிருந்தது. இது அன்று அரபு உலகிற்கும் இலங்கைக்கும் உள்ள கப்பல் மார்க்கம் தொடர்பான ஒரு பேருண்மையாகும். சோமாலிய கடற்கொள்ளையர்கள் பற்றி பேசப்படுகின்றன. அவர்கள் அன்றும் இருந்துள்ளார்கள். அவர்கள் கடல் விவகாரங்களில் மிகத் திறமையானவர்கள்.

‘அரேபியன் நைட்’ என்ற புத்தகம் வெறும் கற்பனை கதையெனக் கருத வேண்டாம். அது சிறந்த ஆய்வுக்குரிய நூலாகும். பக்தாத் போன்ற நகரங்களின் உன்னத நிலையை அதனூடாக அறிந்துகொள்ள முடியும்.

1815 முதல் ஐரோப்பியர் இலங்கைக்கு வந்து எமது வளங்களை சூறையாடிச் சென்றனர். இன்றும் அவர்களது பரம்பரையினர் எமது வளங்களை அனுபவிக்கின்றனர். மூன்றாவது தலைமுறைவரை அவர்கள் அதனை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

ஆன்றைய அரபுலக பேரரசனான ஹாரூன் அல்-ரசீத் இலங்கை மன்னர்களுடன் நெருங்கிய மற்றும் சிறந்த தொடர்புகளை வைத்திருந்தார். அவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்துள்ளனர்.

அனுராதபுர காலத்து அரசர்களது தகவல்களை சரியாகத் தெரிந்து கொள்ளக்கூடிய தகவல்கள் அரேபிய நூல்களில் உள்ளன. வேறு எந்த நூல்களையும்விட மிகத் தெளிவாக அரேபிய நூல்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, இலங்கை அரசர்கள் பற்றிய விரிவான தகவல்கள் அரேபியாவிலுள்ள நூல்களில் காணலாம். இது எமது உறவுக்கு முக்கிய பாலமாக உள்ளது.

இலங்கையின் தேன் அக்காலத்தில் பக்தாத் நகரில்  விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள கண்வைத்தியத் துறையில் உள்ளவர்களுக்கும் பக்தாதில் உள்ளவர்களுக்கும்  இடையே  சிகிச்சைவழியாகப் பல தொடாபுகள் இருந்துள்ளன. இப்படி பல தொடர்புகள் அரபுலக முஸ்லிம்களுக்கும் இலங்கைக்கும் இருந்துள்ளன. ஸ்ரீபாத மலையிலுள்ள பாதத்தை தரிசித்த 47 ஆய்வாளர்களில் 46 பேர் அதனை ‘அடம்ஸ்பீக்’ (ஆதமின் பாதம்) என்றே குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீபாத மலைக்கு ஏறுபவர்களில் வழிகாட்டிகளாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர்.

மொல்லிகொடை பிரதானியின் வளவ்வை (மாளிகையை) பாதுகாத்தவர் ஒரு முஸ்லிம். அவர் மிகவும் நம்பிக்கையானவராகக் காணப்பட்டார். அது மட்டுமல்ல, பிரதானி கெப்பட்டிபொல மறைந்துள்ளதைக் கண்டுபிடிக்க  முஸ்லிம் வியாபாரிகள் மூலமே முடிந்தது. இதனை சிலர் தவறாகக் கூறுவர். அதில் மறைந்துள்ள உண்மையை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறுகின்றனர். காரணம், முஸ்லிம் வர்த்தகர்கள் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் நம்பிக்கையாக நடப்பார்கள். சதி செய்யமாட்டார்கள். வீடுகளுக்குள் நுழைந்தாலும் தவறான வேலை எதனையும் புரியமாட்டார்கள்; திருட மாட்டார்கள்; பெண்களை தவறாக நடத்த மாட்டார்கள்; நோக்கவும் மாட்டாரகள்.  எனவேதான் அவர்கள் மூலமாக தகவல் அறிந்துகொண்டார்கள்.

ஆனால், முஸ்லிம்களுடான சிங்களவர்களுக்கிருந்த நம்பிக்கையை உடைக்கவே பிரித்தானியர் அன்றும் இன்றும் முயற்சிக்கின்றனர்.

‘சிங்கள’ என்று கூறுவது பெளத்தர்களை மட்டும் குறிப்பதல்ல. சிங்கக் கொடியை சிங்களவர் கொடி என சில தமிழர்கள் கூறுவதைக் கேட்டுள்ளேன். அது தவறாகும். சிங்கக் கொடியில் முஸ்லிம்களும் உள்ளனர். அதேபோல் சிங்கள என்றால் இலங்கையர்களையே குறிப்பிடுகிறது. அதில் முஸ்லிம்களும் அடங்குகின்றனர். முஸ்லிம்களின் குடும்பப் பெயர்கள் சிங்கள வாசகமயுடன் உள்ளது. முதியான்சலாகே, விதானலாகே, ஆரச்சிலாகே என்றெல்லாம் உண்டு. இலங்கைக்கு வந்த அரேபியர்கள் தமிழர்களுடன் வியாபாரம் செய்ய தமிழைப் பயன் படுத்தினார்கள். அது காலப்போக்கில் வியாபாரத்துக்காக தமிழ் மொழி பாவனை அதிகரித்து இலங்கையிலுள்ள அரேபியர்களது அரபு மொழிப் பாவனை குறைந்தது. காலப்போக்கில் அரேபியர்களது கலப்பினமான முஸ்லிம்களது மொழியாகவும் தமிழ் மொழி மாறியது என்றார்.

கண்டி சிட்டி ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி பஸ்லுல் றஹ்மான், அக்குறணை ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி எம். ஏ. எம். சியாம், சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.