மாணவர்களை விடுவிக்க ஆவனசெய்யுமாறு கிழக்கு ஆளுநரிடம் பெற்றோர் வேண்டுகோள்

0 668

தொல்பொருள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை  சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் சில நாட்களுக்கு முன்னர்  கைது செய்யப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும்  கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது பிள்ளைகளை விடுவிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

நேற்றுமுன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரது ஆளுநர் செயலகத்தில் அவர்கள் சந்தித்தனர்.

எதிர்வரும் 05 ஆம் திகதி வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு ஆளுநர் சட்டரீதியான முன்னெடுப்புக்களைக்   கேட்டறிந்ததோடு, இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணியை தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்து கொண்டார்.

இது தொடர்பாக பொலிஸார் புராதன தொல்பொருள் திணைக்களத்திலிருந்து விரிவான அறிக்கையினை கோரியுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அதனை ஆராய்ந்து தீர்ப்பினை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி ஆளுநரிடம் தெரிவித்தார்.

மேலும் புராதன தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. மண்டாவலவை ஆளுநர் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

குறிப்பிட்ட சந்தேக நபர்களான இந்த மாணவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. அது தற்செயலாக இடம்பெற்ற விடயம். ஆகவே இது விடயமாக கரிசனை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் எதிர்வரும் வாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  கே.எல்.எம். பரீட், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் முஹம்மத் றுஸ்வின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.