பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை ஆழ்ந்த இரங்கல்

0 599

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அல்-முக்ஹைர் கிராமத்தில் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை நோக்கம் கொண்ட தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அடே அட் என்ற பலஸ்தீன கிரமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சட்டவிரோத குடியேற்றப் பகுதியி்ல் இஸ்ரேலியக் குடியேற்றவாசிகள் பலஸ்தீன கிரமவாசிகளுக்கு எதிராக  நடத்திய தாக்குதலில் ஹம்தி நஸ்ஸான் என்ற 38 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

சுமார் 30 இஸ்ரேலியர்கள், இவர்களுள் சிலர் ஆயுதங்களை வைத்திருந்தனர். வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் கிரமத்திற்குள் புகுந்து கிராமவாசிகளையும் மற்றும் அவர்களது வீடுகளையும் உண்மையான துப்பாக்கி ரவைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் ருபொர்ட் கொல்விலே கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தள்ளார்.

இத்தாக்குதலின் போது காயமடைந்த ஆறு பலஸ்தீனர்களுள் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகின்றது. இதன்போது குடியேற்றவாசிகள் எவரும் காயமடைந்தனரா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலியப் படையினர் தலையிட்டதன் பின்னர் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் உண்மையான துப்பாக்கி ரவைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இவர்கள் இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலில் காயமடைந்தனரா அல்லது குடியேற்றவாசிகளின் தாக்குதலில் காயமடைந்தார்களா என்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவில்லை.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.